

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது தில்லி பயணத்தை முடித்துக் கொண்டு புதன்கிழமை சென்னை திரும்பினார்.
கடந்த ஜூலை 7- ஆம் தேதி இரவு 6 நாள் பயணமாக தில்லி வந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தில்லி பயணத்தை ஒரு நாள் முன்னதாகவே முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார். முன்னதாக அவர், ஜூலை 13 -ஆம் தேதி சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தார். இந்த 5 நாள் பயணத்தில் தமிழக ஆளுநர் தில்லியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று சந்திப்புகளையும் மேற்கொண்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கடந்த சனிக்கிழமை சந்தித்த ஆளுநர், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மூத்த வழக்குரைஞரும் அட்டர்னி ஜெனரலுமான ஆர். வெங்கட்ரமணியை சந்தித்தார். சுமார் 2 மணி நேரம் தமிழ்நாடு இல்லத்தில் இருவரும் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்த ஆளுநர், தனது உத்தரவை நிறுத்திவைத்துள்ள நிலையில் இது போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆளுநர் ஆலோசனைகளை மேற்கொண்டு தற்போது சென்னை திரும்பியுள்ளார்.
தில்லி வந்த ஆளுநர் ரவி, பிரதமர் மோடியை சந்திக்கவில்லை. அதே சமயத்தில் அடுத்த வாரம் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் கூட்டத்திற்கு ஆளுநர் மீண்டும் தில்லி வரலாம் எனவும் கூறப்படுகிறது. இந்தச் சமயத்தில் பிரதமரை சந்திக்கலாம் எனவும் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.