காஞ்சிபுரத்தில் பட்டு விற்பனையகங்களில் பறக்கும்படை அதிகாரிகள் திடீர் ஆய்வு

காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை விற்பனையகங்களில் கைத்தறித்துறையின் பறக்கும்படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தீடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
காஞ்சிபுரத்தில் பட்டு விற்பனையகங்களில் பறக்கும்படை அதிகாரிகள் திடீர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பட்டுச்சேலை விற்பனையகங்களில் கைத்தறித்துறையின் பறக்கும்படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தீடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ஜவுளி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வதை கண்காணிக்க தமிழக கைத்தறித் துறை ஆணையாளர் கே.விவேகானந்தன் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் 7 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டிருந்தன. 

இதில் காஞ்சிபுரம் மாநகரில் பறக்கும்படை அதிகாரிகளான கைத்தறித்து றை இணை இயக்குநர் கணேசன், உதவி இயக்குநர்கள் ஆனந்த், ஸ்ரீதர் மற்றும் செந்தாமரை ஆகியோர் பிரபலமான பட்டு ஜவுளி விற்பனை நிறுவனங்கள் 10க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

வெளிமாநிலத்திலிருந்து விசைத்தறியில் உற்பத்தி செய்த சேலைகள் விற்பனை செய்கிறார்களா எனவும் சோதனை நடத்தினார்கள். இவர்களது ஆய்வில் ஒரு கடையில் வெளிமாநிலத்தில் கைத்தறிச் சேலை ரகங்களை கொள்முதல் செய்து அதில் பட்டு முத்திரை அச்சிடப்பட்டு லேபில் ஒட்டி விற்பனை செய்ததை கண்டறிந்து அக்கடைக்கு கைத்தறி ரக ஒதுக்கீட்டு சட்ட விதிகளை மீறியதாக நோட்டீஸ் வழங்கினார்கள்.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பட்டுச்சைலை விற்பனையகங்கள் கைத்தறிச் சேலைகளையே விற்பனை செய்ய வேண்டும். விசைத்தறியில் உற்பத்தியான சேலைகளை விற்பனை செய்யக்கூடாது. ஜவுளிக்கடைகள் அரசு சட்ட விதிகளை மீறினால் காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.

கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டால் 6 மாத சிறைத்தண்டனை அல்லது விசைத்தறி சேலை ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமாகவோ அல்லது இரண்டும் இணைந்த தண்டனையாக வழங்கப்படும்.

கைத்தறி ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வது தொடர்பான புகார்களை 18005997637 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். புகார்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். காஞ்சிபுரம் கே.எஸ்.பார்த்தசாரதி தெருவில் இயங்கி வரும் கைத்துறித் துறை துணை இயக்குநர் அலுவலரையும் தொடர்பு கொண்டு நேரிலும் புகார் தெரிவிக்கலாம் எனவும் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com