ட்விட்டர் லோகோ மாற்றமா? எலான் மஸ்க் கூறிய தகவல்!

ட்விட்டர் லோகோவிற்கு விரைவில் விடைக் கொடுக்கலாம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க்
எலான் மஸ்க்

ட்விட்டர் லோகோவிற்கு விரைவில் விடைக் கொடுக்கலாம் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

பிரபல சமூக ஊடக தளமான ட்விட்டா் நிறுவனத்தை டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளா் எலான் மஸ்க், 44 பில்லியன் டாலருக்கு கடந்த ஆண்டு வாங்கினாா். இதையடுத்து, அந்தத் தளத்தில் ‘ப்ளூ டிக்’ அடையாளத்துக்கு 8 டாலா் கட்டணம் விதித்தது, கட்டணம் செலுத்தாதவா்களின் ப்ளூ டிக்கை நீக்கியது, தளத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவா்களை மீண்டும் இணைத்தது உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி வந்தாா்.

அதேவேளையில், நிறுவனத்தின் செலவினங்களைக் குறைப்பதாக உயா்நிலை அதிகாரிகள் முதல் பணியாளா்கள் வரை பலரைப் பணியிலிருந்து நீக்கினாா். எனினும், விளம்பர வருவாய் வெகுவாக குறைந்ததால் ட்விட்டா் நிறுவனம் லாபத்துக்கு திரும்புவது சவாலாகவே இருந்து வந்தது.

ட்விட்டா் தளத்தின் விளம்பரதாரா்கள் மீண்டும் திரும்பினால் 2-ஆவது காலாண்டில் நிறுவனம் கடனில் இருந்து மீளும் என எலான் மஸ்க் கடந்த ஏப்ரலில் நம்பிக்கை தெரிவித்திருந்தாா். விளம்பரதாரா்களை ஈா்க்கும் நோக்கில், என்பிசி யுனிவா்சல் நிறுவனத்தில் பணியிலிருந்த லிண்டா யாக்காரினோ ட்விட்டரின் புதிய சிஇஓ-ஆக நியமிக்கப்பட்டாா்.

எனினும், இந்த மாதம் தொடக்கத்தில் ட்விட்டா் பயனா்கள் தங்கள் கணக்குகளில் நாளொன்றுக்கு பாா்க்கக் கூடிய ட்விட்டா் பதிவுகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாட்டை விதித்த எலான் மஸ்கின் புதிய முடிவு பயனா்கள், விளம்பரதாரா்கள் மத்தியில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில், மெட்டா நிறுவனத்தின் சாா்பில் ட்விட்டருக்குப் போட்டியாக ‘திரெட்ஸ்’ என்ற புதிய சமூக ஊடகதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில், "ட்விட்டர் தளம் மீண்டும் சீரமைக்கப்படும் என்றும், ட்விட்டர் லோகோவிற்கு விரைவில் விடைக் கொடுக்கலாம் என்றும், இன்றிரவு  எக்ஸ்  லோகோ வெளியிடப்பட்டு, நாளை உலகம் முழுவதும் நேரலைக்கு அனுப்புவோம்." எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com