ஆளுநர் விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்!

ஆளுநர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
டி.ஆர். பாலு
டி.ஆர். பாலு

தில்லி: ஆளுநர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக அரசுக்கும் தொடர்ந்து கருத்து மோதல் நிலவி வருகின்றது. அரசுக்கு எதிராக பல்வேறு அரசியல் கருத்துகளை ஆளுநர் பேசுவதால் சர்ச்சை ஏற்படுகிறது.

இதனால், தமிழக ஆளுநரை திரும்பப் பெறக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு 22 பக்க புகார் கடிதத்தை எழுதியிருந்தார்.

அதில், “வகுப்புவாத வெறுப்பை தூண்டிவிட்டு மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறார் ஆளுநர். அமைச்சரவை நீக்குவது தொடர்பான ஆளுநரின் பரிந்துரை சட்டவிரோதமானது, அரசியலமைப்பை மீறி செயல்பட்டு வருகிறார்.

குற்றவாளிகள் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குவதில் ஆளுநர் தேவையற்ற தாமதம் செய்கிறார். சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர் ரவி காலதாமதம் செய்கிறார்” என்பன உள்ளிட்ட பல்வேறு புகார்களை ஆளுநர் மீது முதல்வர் ஸ்டாலின் முன்வைத்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் மழைக்கால கூட்டத்தொடரில் இன்றைய மக்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க கோரி டி.ஆர்.பாலு நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

ஏற்கெனவே மணிப்பூர் விவகாரத்தில் இரு அவைகளும் முடங்கியுள்ள சூழலில், ஆளுநர் விவகாரத்தை திமுக கையிலெடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com