என்எல்சிக்காக விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணியை உடனே நிறுத்த வேண்டும்: கமல்ஹாசன்

நெய்வேலி என்எல்சிக்காக விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
என்எல்சிக்காக விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணியை உடனே நிறுத்த வேண்டும்: கமல்ஹாசன்

நெய்வேலி என்எல்சிக்காக விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணியை உடனே நிறுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் 2-வது சுரங்க விரிவாக்கப் பணிக்காக கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள  கிராமங்களில் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. வேளாண் நிலங்களில் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி, சுரங்க விரிவாக்கத்துக்காக வளையமாதேவி பகுதியில் வாய்க்கால் வெட்டும் பணி தொடங்கியுள்ளது. இதனால், அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் போராடுவார்கள் என்று தெரிந்ததால், போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதையும் மீறி போராட்டங்கள் வெடித்து, பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் தாக்கப்பட்டுள்ளன.

பயிர்கள் விளைந்து நிற்கும் வயல்களில், ராட்சத இயந்திரங்கள் மூலம் பணிகளை மேற்கொள்வது வேதனைக்குரியது. விளைநிலங்களுக்குக் கீழே தங்கமே கிடைத்தாலும், வேளாண்மை செய்வதே அறிவுடைமை. ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளால் விவசாயிகள் உழவுத்தொழிலில் இருந்து வெளித்தள்ளப்பட்டு, விளைநிலங்கள் சுருங்கி வரும் சூழலில் வளர்ச்சி எனும் பெயரால் விவசாயம் அழிக்கப்படுவது மானுடத்திற்கே எதிரான அநீதி.

நிலக்கரிச் சுரங்கத்துக்காக பல நூறு ஏக்கரில்  விளை நிலங்களைக் கையகப்படுத்த முற்படுவதும், அதற்கு எதிராக மக்கள் போராடுவதும் தொடர் கதையாகி வருகிறது. பொதுத்துறை நிறுவனமாகவே இருந்தாலும், மக்களின் எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, சுரங்க விரிவாக்கத் திட்டத்தைக் கைவிடுவதே சாலச் சிறந்தது.

வேளாண் பெருமக்களின் எதிர்ப்பையும் மீறி, விளை நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சிக்குத் தமிழ்நாடு அரசு ஒருபோதும் துணைபோகக் கூடாது. எதன்பொருட்டும் விவசாயிகளின் விளைநிலங்களைப் பறிப்பது  ஏற்கத்தக்கதல்ல. விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தால்தான் வளர்ச்சி கிடைக்கும் என்றால், அப்படிப்பட்ட வளர்ச்சி தேவையே இல்லை.

வயிற்றுக்குச் சோறிடுவோரை வேதனைக்குள்ளாக்க வேண்டாம். விவசாயிகள், பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, விளை நிலங்களைக்  கையகப்படுத்தும் பணியை உடனே நிறுத்த வேண்டும். ஏற்கெனவே நிலம் கொடுத்தவர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com