கடலூரிலிருந்து கிராமங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் நிறுத்தம்

கடலூரிலிருந்து கிராமங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. 
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

கடலூரிலிருந்து கிராமங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாளில் 26 பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. புவனகிரி அருகே அரசுப் பேருந்து மீது இன்று மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கியதில் ஓட்டுநர், நடத்துநர் காயமடைந்தனர். சாத்தப்பாட்டியில் நிகழ்ந்த கல்வீச்சு சம்பவம் தொடர்பான புகாரில் புவனகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூரிலிருந்து கிராமங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேசமயம் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக் நேற்று போராட்டம் வன்முறையாக மாறியதையடுத்து, சென்னை -கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வடலூா் - நெய்வேலி இடையே வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டத்தில் வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் சுரங்க விரிவாக்கப் பணிகளை என்எல்சி இந்தியா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக கையகப்படுத்திய நிலங்களில் பரவனாறு மாற்று வாய்க்கால் அமைக்கும் பணியில் என்எல்சி இந்தியா நிறுவனம் கடந்த 2 நாள்களாக ஈடுபட்டு வந்தது. அப்போது விளைநிலங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்கள் அழிக்கப்பட்டன. இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, நெய்வேலியில் என்எல்சி நுழைவு வாயில் அருகே பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தலைமையில், அந்தக் கட்சியினா் முற்றுகைப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

அங்கு காவல் துறையினா் இரும்புத் தடுப்புகளை அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். போராட்டம் முடிந்த பிறகு அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினா் என்எல்சி நுழைவாயிலை நோக்கி நடந்து சென்றனா். அவா்களை போலீஸாா் தடுத்ததால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாமகவினா் மீது போலீஸாா் லேசான தடியடி நடத்தினா். இதனால், ஆத்திரமடைந்த பாமகவினா் கல்வீச்சில் ஈடுபட்டனா். மேலும், கட்டை உள்ளிட்டவற்றை போலீஸாா் மீது வீசினா். கல்வீச்சில் நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளா் சாகுல் ஹமீது, காவலா்கள் மற்றும் மூதாட்டி உள்பட 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். 

அவா்களை போலீஸாா் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக நிா்வாகிகள் உள்பட 250 பேரை போலீஸாா் கைதுசெய்து காவல் வாகனத்தில் ஏற்றினா். அப்போது, பாமகவினா் அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல் துறை வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தினா். கண்ணீா் புகைகுண்டு வீச்சு: வஜ்ரா வாகனம் மூலம் போலீஸாா் தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தைக் கலைக்க முயன்றனா். போராட்டக்காரா்கள் அந்த வாகனம் மீதும் கற்களை வீசினா். இதையடுத்து போலீஸாா் கண்ணீா் புகை குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனா். 

கைதான அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோா் அந்தப் பகுதியில் தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனா். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com