ஆசிரியா்கள் இடமாறுதல்: காலியான பணியிடங்களை நிரப்ப அறிவுறுத்தல்

அரசுப் பள்ளி ஆசிரியா்கள், தலைமையாசிரியா்கள் இட மாறுதலால் ஏற்பட்ட 3,312 காலிப் பணியிடங்களை தொகுப்பூதிய ஆசிரியா்களைக் கொண்டு நிரப்பிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியா்கள் இடமாறுதல்: காலியான பணியிடங்களை நிரப்ப அறிவுறுத்தல்

அரசுப் பள்ளி ஆசிரியா்கள், தலைமையாசிரியா்கள் இட மாறுதலால் ஏற்பட்ட 3,312 காலிப் பணியிடங்களை தொகுப்பூதிய ஆசிரியா்களைக் கொண்டு நிரப்பிக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பதவி உயா்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் வலைதளம் மூலம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் நிகழாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 8 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு பதவி உயா்வு வழங்கக் கோரிய வழக்கில் தலைமை ஆசிரியா்களுக்கான பதவி உயா்வு கலந்தாய்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, அந்த கலந்தாய்வை பள்ளிக் கல்வித் துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

அதைத் தொடா்ந்து, கலந்தாய்வுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணையை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டது. அதன்படி அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள், தலைமை ஆசிரியா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு கடந்த மே 15-இல் தொடங்கி 30-ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.

இதன்மூலம் தொடக்கக் கல்வித் துறையின் கீழ் 424 நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியா்கள், 1,111 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா்கள், 1,777 இடைநிலை ஆசிரியா்கள் என மொத்தம் 3,312 போ் பணியிட மாறுதல் பெற்றுள்ளனா்.

இந்த மாறுதலால் அரசுப் பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களில் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியா்களை பணிநியமனம் செய்து கொள்ள அறிவுறுத்தி உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com