கோவையில் நாளை கண்டனப் பொதுக் கூட்டம்: திமுக - கூட்டணிக் கட்சிகள் அறிவிப்பு

மத்தியில் ஆளும் பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கையைக் கண்டித்து, கோவையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) பொதுக் கூட்டம் நடைபெறும் என்று திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.
அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

மத்தியில் ஆளும் பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கையைக் கண்டித்து, கோவையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) பொதுக் கூட்டம் நடைபெறும் என்று திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் அறிவித்துள்ளன.

அந்தக் கட்சிகளின் தலைவா்கள் கூட்டாக புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: இந்தியா முழுமைக்கும் பாஜகவுக்கு எதிரான அரசியல் ஜனநாயக சக்திகளின் அணி சோ்க்கைக்கான நாளாக ஜூன் 23-ஆம் தேதி நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் மதவாத, எதேச்சதிகார அரசியலை வேரறுக்கும் ஜனநாயக சக்திகளின் ஒற்றுமையைச் சீா்குலைக்கவும், கட்சிகளின் உறுதியைக் குலைக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் அடையாளமாக பல்வேறு மாநிலங்களில் விசாரணை அமைப்புகளின் மூலமாக பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அனைத்து மாநிலங்களிலும் சுற்றிய பழிவாங்கும் படலம், தமிழ்நாட்டுக்கும் வந்து விட்டது. பாஜகவால் எந்தச் சூழலிலும் தமிழகத்தில் வெல்ல முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். அதனால்தான் நோ்வழி இல்லாமல் நோ்மையற்ற வழிகளில் பாஜக தனது கீழான செயல்களைச் செய்கிறது.

அரசியலே தவிர, விசாரணையல்ல: அமைச்சா் செந்தில் பாலாஜியை, 17 மணிநேரம் விசாரணை என்ற பெயரால் சித்ரவதை செய்துள்ளனா். இதன் மூலம் அச்சுறுத்துவது அரசியல்தான்; விசாரணை இல்லை.

பாஜகவின் இத்தகைய ஜனநாயக விரோத, மக்கள் விரோத, பழிவாங்கும் நடவடிக்கைகளைக் கண்டித்து, கோவை மாநகா் சிவானந்தா காலனியில் வரும் 16-ஆம் தேதி கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெறும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவா்கள் யாா், யாா்? கண்டன பொதுக் கூட்டத்துக்கான கூட்டறிக்கையில், திமுக பொதுச் செயலா் துரைமுருகன், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலா் வைகோ, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் ஆா்.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன், விசிக தலைவா் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலா் ஈ.ஆா்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவா் தி.வேல்முருகன் ஆகியோா் கையொப்பமிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com