
சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.
மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக 17 மணிநேரத்துக்கும் மேலாக அவரது வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையில் அமலாக்கத் துறையினரால் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவரது அறையில் இருந்து 3 பைகளில் இருந்து ஆவணங்களை அமலாக்கத் துறையினர் எடுத்துச் சென்றனர்.
17 மணி நேர சோதனைக்குப் பிறகு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நெஞ்சு வலிப்பதாக கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் அமர்வின் முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், அமலாக்கத்துறை எந்த தகவலும் அளிக்காமல் சட்டவிரோதமாக செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளதாகவும், அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கை இன்று பிற்பகல் 2.15 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.