விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோவையில் தினமணி சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தினமணி நாளிதழ் சார்பில் கோவையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூன் 2023, 12:39 pm

 உலக சுற்றுச்சூழல் தின பொன்விழா ஆண்டையொட்டி தினமணி நாளிதழ் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்றது.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கோவை பதிப்பு முதுநிலை மேலாளர் ஜி.தியாகராஜன் வரவேற்றார். முதன்மை விருந்தினர்களாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், பார்க் கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி அனுஷா ரவி, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் (சில்லறை விற்பனை) எம்.பழனி பிரியா, கதிர் கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வர் ஆர்.கற்பகம், கதிர் பொறியியல் கல்லூரி முதல்வர் ஆர்.உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

Story image

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேசும்போது, புவி வெப்பமயமாகும் பிரச்னை உலகிற்கே அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது. இதனால் அடுத்த சில ஆண்டுகளில் கடற்கரை நகரங்கள் நீரில் மூழ்கும் வாய்ப்பு இருப்பதாக பல்வேறு ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இதைத் தவிர்ப்பதற்கு நம்மிடம் இருக்கும் ஒரே வாய்ப்பு காற்றில் கார்பன் அளவை கட்டுப்பாட்டில் வைப்பதுதான். காற்றில் இருக்கும் கார்பனை சுத்தப்படுத்தும் ஒரே வாய்ப்பாக மரங்கள் உள்ளன. பூமியில் மனிதர்கள் தோன்றும் முன்னரே மரங்கள் இருந்தன. நாம் அவற்றை அழித்துவிட்டோம். தற்போது மரங்களை மீட்டெடுக்க வேண்டிய தேவை உருவாகியுள்ளது.

Story image

வளிமண்டலத்தில் கார்பன் வெளியிடுவதை குறைப்பதுடன், மரங்களை அதிகமாக நட்டு காற்றைத் தூய்மைப்படுத்த வேண்டும். வளிமண்டலத்தில் இருந்து கார்பனை உறிஞ்சுவதற்கும் வெளியேற்றுவதற்குமான இடைவெளியையே கார்பன் நடுநிலைமை என்கிறோம். கோவையை அதுபோன்ற கார்பன் நடுநிலைமை நகரமாக மாற்ற அனைவரும் கரம்கோர்க்க வேண்டும். இதற்காக பல்வேறு தன்னார்வலர்கள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த பணியில் தினமணி நாளிதழும் ஈடுபட முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.

மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் பேசும்போது, கரோனா காலத்தில் ஆக்சிஜனின் முக்கியத்துவம் என்ன என்பதை கண்கூடாகப் பார்த்தோம். எதிர்காலத்திலும் இதுபோன்ற பிரச்னைகள் வரக்கூடும். எனவே முன்னெச்சரிக்கையாக சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் மின்னணு கழிவுகளும் முக்கிய பிரச்னையாக உருவெடுக்கும் என்று கருதப்படுகிறது.

Story image

கோவையில் சுமார் 2,700 காவல் துறை குடும்பங்கள் உள்ளன. அவர்கள் ஒவ்வொருவருக்கும் சராசரியாக தினசரி எவ்வளவு ஆக்சிஜன் தேவைப்படுகிறதோ, அவ்வளவு ஆக்சிஜனை வெளியிடக் கூடிய அளவில் மரக்கன்றுகளை நடவிருக்கிறோம். அதுபோல மாநகரில் உள்ள ஒவ்வொரு குடும்பமும், நிறுவனங்களும் முன்வர வேண்டும். இதுபோன்ற பணிகளில் அரசு மட்டுமே தனியாக ஈடுபட முடியாது. தினமணி நாளிதழ் போல அனைவரும் இந்த பணியில் இணைந்து செயல்பட முன்வர வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், கோவை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வரும் தன்னார்வலர்கள், கிரீன் கேர் அமைப்பின் நிறுவனர் கே.சையது, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.மணிகண்டன், மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அழிந்து வரும் வன உயிரினங்களை ஓவியமாக வரைந்து ஆவணப்படுத்தி வரும் சுரேஷ் ராகவன், வன உயிர்கள், இயற்கை பாதுகாப்பு பவுண்டேஷனின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிராஜூதீன், பள்ளி மாணவர்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் பொள்ளாச்சி பள்ளி ஆசிரியர் டி.பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் விருது வழங்கி கெளரவித்தார்.

Story image

இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், மேஜையில் வைத்து பராமரிக்கக் கூடிய சிறிய பூந்தொட்டிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.