காஞ்சிபுரம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளபடி, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
காஞ்சிபுரம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!


காஞ்சிபுரம்: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளபடி, காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் முடிவுற்ற நிலையிலும், கோடை வெப்பத்தின் தாக்கம் குறையாமல் இருந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் ஜூன் 18 ஆம் தேதி முதல் தமிழகத்தின் 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

சென்னை வானிலை மையம் அறிவிப்பின் படி, நேற்று காலை முதலே லேசான மேகமூட்டம் காணப்பட்டு லேசாக மழை பெய்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கருமேகங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய மழை பெந்தது.

காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத், உத்தரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

காஞ்சிபுரம் பழைய ரயில்வே நிலையம் நுழைவாயில் பகுதியில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகனம் ஓட்டிகளும், ரயில் பயணிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். வேலை நாளான திங்கட்கிழமை பல்வேறு பணிகளுக்கு அதிகாலை நேரத்தில் வெளியூர் செல்லும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மழையில் நனைந்தவாறு சென்றனர்.

இருப்பினும் சூட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது மழை பெய்து குளிர்ந்த காற்று வீசி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று குன்றத்தூரில் 8.8 செ.மீட்டர், காஞ்சிபுரத்தில் 8.7 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் காஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று திங்கள்கிழமை(ஜூன் 19) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com