காட்டூரில் கலைஞர் கோட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
கலைஞர் கோட்டத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்
கலைஞர் கோட்டத்தை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்

திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
 தனது சகோதரி செல்வியுடன் இணைந்து கலைஞர் கோட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார். தொடர்ந்து, அங்கு நிறுவப்பட்டுள்ள கருணாநிதி சிலையையும் அவர் திறந்து வைத்தார்.
 பின்னர், அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற கருணாநிதியின் புகழ் கூறும் படங்கள், சிலைகள் குறித்து பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு தமிழக முதல்வர் விளக்கினார்.
 கலைஞர் கோட்டத்தின் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள முத்துவேலர் நூலகத்தை பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்தார். அங்கு கட்டப்பட்டுள்ள அஞ்சுகம் அம்மாள் திருமண மண்டபத்தில் 4 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேஜஸ்வி யாதவுக்கு நினைவுப் பரிசை முதல்வர் வழங்கினார்.
 கலைஞர் கோட்டம் உருவாகக் காரணமாக இருந்த முதல்வரின் சகோதரி செல்வி, அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் மோகன் காமேஸ்வரன், அறங்காவலர் சம்பத்குமார், அறக்கட்டளைக்கு இடம் வழங்கிய வானதி, தருமபுரம் ஆதீனம் ராஜாங்கட்டளை தம்பிரான், கட்டடக் கலைஞர்கள் உள்ளிட்டோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. கோட்டம் உருவாகக் காரணமாக இருந்த அமைச்சர் எ.வ. வேலுவை மேடைக்கு அழைத்து கெளரவப்படுத்தினார் முதல்வர் ஸ்டாலின்.
 முன்னதாக, பிகார் முதல்வர் நிதீஷ் குமார் பங்கேற்று கலைஞர் கோட்டத்தை திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அவர் பங்கேற்கவில்லை.
 கவியரங்கம், பட்டிமன்றம்: முன்னதாக, கவிஞர் வைரமுத்து தலைமையில் கவியரங்கமும், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமும், மாலதி லக்ஷ்மண் தலைமையில் பாட்டரங்கமும் நடைபெற்றன.
 அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, கே. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ரகுபதி, முத்துசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் இரா. முத்தரசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 "பெண்களுக்கு சொத்துரிமை பெற்றுக் கொடுத்தவர் கருணாநிதி'
 திருவாரூர் மாவட்டம், காட்டூரில் 7 ஆயிரம் சதுரடியில் ரூ. 12 கோடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் செவ்வாய்க்கிழமை திறந்து வைப்பதாக இருந்தது. அவருக்கு திடீரென ஏற்பட்ட உடலநலக் குறைவு காரணமாக திறப்பு விழாவில் பங்கேற்கவில்லை.
 இதனால், அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மேடையில் வாசித்தார்.
 அதில் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளதாவது:
 மு.கருணாநிதி வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய, பின்தங்கிய மக்களுக்கான உரிமைகளை பெற்றுத் தர உழைத்தவர்.
 பெண்களுக்கு சொத்து உரிமை மற்றும் 33 சதவீத இடஒதுக்கீடு பெற்றுத் தந்தவர். பொதுவாழ்க்கையில் உள்ளவர்களுக்கு அவர் வழிகாட்டியாக உள்ளார்.
 கடந்த 2001-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் திமுகவுக்கு பிரதிநிதித்துவம் இல்லாதபோது, நான் திமுகவின் சார்பில் கருத்துகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்தேன்.
 முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்.
 கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் பிகார் மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகக் கூறப்பட்ட விவகாரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
 பிகார் மக்கள் தமிழகத்தில் நலமாக உள்ளனர் என்பதை அவர் உறுதி செய்தார்.
 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜக வீழ்த்தப்படும் என வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருந்தார்.

"கருணாநிதியின் கொள்கைகளை தேசிய அளவில் செயல்படுத்துவது அவசியம்'
 தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் கொள்கைகளை தேசிய அளவில் செயல்படுத்துவது அவசியம் என பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
 கலைஞர் கோட்டத்தில் உள்ள முத்துவேலர் நூலகத்தை செவ்வாய்க்கிழமை திறந்து வைத்து அவர் பேசியது: முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி, பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைக் களைந்தவர்.
 திராவிட தத்துவங்களை மக்கள் மத்தியில் நிலை நாட்டியவர். உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். கருணாநிதி ஆட்சியில் சமூகநீதி நிலைநாட்டப்பட்டது.
 தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தந்தை வழியில் சமூக நீதியை நிலைநாட்டி வருகிறார். ஜனநாயகத்துக்கு எதிராக நடைபெறும் அடக்குமுறைகளை எதிர்த்து நாம் நடத்தும் போராட்டங்களுக்கு கருணாநிதியின் கொள்கைகள் வழிகாட்டும். அவரது கொள்கைகளை தேசிய அளவில் செயல்படுத்துவது அவசியம் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com