பட்டுக்கோட்டை: கம்யூ. கட்சியின் முன்னாள் நகரச் செயலர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

பட்டுக்கோட்டையின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர செயலாளரும், நகைகடை உரிமையாளருமான ரோஜா ராஜசேகர் ஞாயிற்றுக்கிழமை இரவு ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை
பட்டுக்கோட்டை: கம்யூ. கட்சியின் முன்னாள் நகரச் செயலர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
Published on
Updated on
1 min read

பட்டுக்கோட்டையின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நகர செயலாளரும், நகைகடை உரிமையாளருமான ரோஜா ராஜசேகர் ஞாயிற்றுக்கிழமை இரவு ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் தேரடித்தெருவைச் சேர்ந்தவர் நகைக்கடை உரிமையாளர் ரோஜா ராஜசேகரன். இவர் திருட்டு நகை வாங்கியதாகக் கூறி கடந்த 22 ஆம் தேதி அன்று கடைக்குள் அத்துமீறி நுழைந்த போலீசார் அங்குள்ள பெண் ஊழியரை தரக்குறைவாக பேசியதுடன், நகைக்கடை உரிமையாளரையும் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து நகைக்கடை உரிமையாளர் வீட்டிற்கு சென்று தரக்குறைவாக பேசி, வீட்டில் இருந்த பீரோ மற்றும் பொருட்களை உடைத்து சோதனை செய்தது மட்டுமல்லாமல் அவரது மனைவியையும் தரக்குறைவாக பேசி அவரையும் கைது செய்தனர். 

இதனைக் கண்டித்து பட்டுக்கோட்டையில் நகர தங்கம், வெள்ளி வியாபாரிகள் சங்கம் மற்றும் பொற்கொல்லர் சங்கத்தினர் தங்களது கடைகளை அடைத்து தேரடித்தெரு முக்கத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 

பின்னர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் சாலை மறியலை கைவிட்டனர். அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை மதியம் கடைக்கு வந்த ரோஜா ராஜசேகர் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 20 மணிக்கு வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு எர்ணாகுளம் செல்லும் ரயில் பட்டுக்கோட்டை அருகே உள்ள செட்டியக்காடு என்ற கிராமப் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது ரயிலின் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கடந்த 22 ஆம் தேதி திருச்சியில் இருந்து வந்த குற்றப்பிரிவு போலீசார் திருட்டு நகை வாங்கியதாகக் கூறி பட்டுக்கோட்டையில் ரோஜா ராஜசேகர் கடை உள்பட இரண்டு கடை மற்றும் ஊரணிபுரம் பகுதியில் 3 கடை உரிமையாளர்களை மிரட்டி ஒரு குறிப்பிட்ட அளவு நகையினை பெற்றுச் சென்றதாகக் கூறப்படுகிறது.  அதில் ரோஜா ராஜசேகரிடம் பேரம் பேசி ஐந்து பவுன் நகை மிரட்டி வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் திருட்டு நகை வாங்கியதாக கைது செய்யப்பட்ட அவமானம் என மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர் இந்த தற்கொலை முடிவு எடுத்ததாகக் கூறப்படுகிறது.

சடலத்தை மீட்ட காவல்துறையினர் உடற்கூராய்வுக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com