ஆலங்குளம் அருகே இரட்டைக் கொலை வழக்கில் ராணுவ வீரர் உள்பட 4 பேர் கைது

ஆலங்குளம் அருகே வழக்குரைஞர் உள்பட 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராணுவ வீரர் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட வழக்குரைஞர் அசோக் குமார், துரைராஜ்.
கொலை செய்யப்பட்ட வழக்குரைஞர் அசோக் குமார், துரைராஜ்.

ஆலங்குளம் அருகே வழக்குரைஞர் உள்பட 2 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராணுவ வீரர் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார்(29). வழக்குரைஞரான இவருக்கு திருமணமாகவில்லை. இவருக்கும் இவரது உறவினரான ராணுவ வீரர் குழந்தை பாண்டி மகன் சுரேஷ்(27) என்பவருக்கும் இடையே இட தகராறு காரணமாக பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அசோக் குமாருக்கு ஆதரவாக அவரது பெரியப்பா துரைராஜ் (57) என்பவரும் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு நெட்டூர் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த அசோக்குமாரை ராணுவ வீரர் சுரேஷ் வீடு புகுந்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார். 

அப்போது தடுக்க முயன்ற அசோக் குமாரின் சகோதரி அருள்ஜோதி(32) என்பவரையும் சுரேஷ் வெட்டியதில் அவருக்கு கை விரல்கள் பாதிக்கப்பட்டது. அசோகுமாரை வெட்டி விட்டு வெளியில் சென்ற போது, அசோக் குமாரின் பெரியப்பா துரைராஜ் சுரேஷை தட்டிக் கேட்டு கன்னத்தில் அறைந்த போது, ஆத்திரம் அடைந்த சுரேஷ் அதே அரிவாளால் துரைராஜையும் வாயில் வெட்டியுள்ளார். அவரும் நிலை குலைந்து கீழே விழுந்து உயிருக்கு போராடியுள்ளார். இதில் அசோக் குமார் நிகழ்விடத்திலேயே பலியானார். துரைராஜ் பலத்த காயங்களுடன் நெட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார். 

சம்பவ இடத்திற்கு தென்காசி எஸ் பி சாம்சன் மற்றும் ஆலங்குளம் போலீஸார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆலங்குளம் போலீஸார் வழக்கு பதிந்து தப்பியோடிய சுரேஷை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் கொலை குற்றவாளியான ராணுவ வீரர் சுரேஷ் நாங்குநேரி கோர்ட்டுக்கு ஆஜராக சென்ற பொழுது போலீஸாரால் கைது செய்யப்பட்டார். மேலும் சுரேஷின் தந்தை குழந்தைபாண்டி(57), உறவினர்கள் மைனர் பாண்டி மகன்கள் மகாராஜன(35), முருகன்(39) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். அசம்பாவிதங்களை தடுக்க நெட்டூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. 

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் சுரேஷுக்கும் அசோக்குமாருக்கும் இடையே இட பிரச்னை தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததாகவும் அதற்குள் அசோக்குமாரின் தந்தை தனது வீட்டின் பிரச்னைக்குரிய இடத்தில் சுவரை இடித்து வாசப்படி வழியினை ஏற்படுத்தியதாகவும் இதனால் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வந்த சுரேஷ் விடுமுறையில் ஊருக்கு வந்த ஒரு வாரத்தில் இரு குடும்பங்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ராணுவ வீரர் சுரேஷ் வழக்கறிஞர் அசோக்குமாருக்கு சொந்தமான ஊருக்கு வெளியில் இருந்த வைக்கோல் படப்பை தீயிட்டு கொளுத்தியுள்ளார். 

இதுகுறித்து அசோக் குமார் குடும்பத்தினர் ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் சுரேஷை தேடி வந்தனர். இந்நிலையில்தான் ஆத்திரமடைந்த சுரேஷ் இரவில் அசோக்குமார் மற்றும் துரைராஜை வெட்டி படுகொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com