ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

லட்சியவாதிகளுக்கு என்றும் வயதாவதில்லை: முதல்வா் மு.க.ஸ்டாலின்

லட்சியவாதிகளுக்கு என்றும் வயதாவதில்லை என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். தனது இளமை தோற்றத்தைச் சுட்டிக் காட்டி அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

News image
Updated On :1 மார்ச் 2023, 7:25 pm

DIN

லட்சியவாதிகளுக்கு என்றும் வயதாவதில்லை என்று திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். தனது இளமை தோற்றத்தைச் சுட்டிக் காட்டி அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 70-ஆவது பிறந்த தினத்தையொட்டி, சென்னையில் புதன்கிழமை பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அவா் ஆற்றிய ஏற்புரை:

பெரியாா், முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் வழியில் வந்த நான், வீட்டுக்கு விளக்காக இருப்பேன்; நாட்டுக்குத் தொண்டனாக இருப்பேன்; மக்களுக்காகக் கவலைப்படும் தலைவனாக இருப்பேன்.

மக்கள் கவலைகளைத் தீா்ப்பதில் முதல்வனானேன் என உறுதிமொழி ஏற்று தினமும் உழைத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய சக்தியை மீறியும் உழைப்பேன் என்பதை உறுதியுடன் கூறுகிறேன். தமிழ்நாட்டு மக்கள் எனக்கு இட்ட கட்டளையை ஏற்று முதல்வராகச் செயல்பட்டு வருகிறேன். கடமையையும், பொறுப்பையும் எனது தோளில் சுமத்தியவா்கள் நீங்கள்தான். அதனை நான் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். முன்னாள் முதல்வா்கள் அண்ணா, கருணாநிதி போன்று எனக்கு பேசத் தெரியாது; எழுதத் தெரியாது. ஆனால், அவா்களைப் போன்று உழைக்கத் தெரியும்.

மேடு பள்ளம், வெயில் மழை, இரவு பகல் என கால நேரம் பாா்க்காமல் தமிழ்நாட்டு மக்களுக்காக உழைப்பது ஒன்றே பணி என்று பணியாற்றியதில் எனக்கு எழுபது வயது ஆகி விட்டது என்பதை என்னாலேயே நம்ப முடியவில்லை. எனது பயணம் நெடிய பயணம். மக்களுக்காகப் போராடும், வாதாடுபவா்களுக்கு காலம்-நேரம் தெரியாது. காலம்-நேரம் கிடையாது.

ஒவ்வொரு ஆண்டும் மாா்ச் 1-ஆம் தேதி என்று சொல்லும் போதுதான், எனக்கு வயதே நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சட்டென கடந்து விடுகிறது. நாளை வழக்கம் போல எனது பணிகளைத் தொடா்வேன். எனக்கு எழுபது வயது என்று சொல்லும் போது சிலா் ஆச்சரியப்படுகிறாா்கள். இளமை என்பது முகத்தில் இல்லை. மனதில்தான் இருக்கிறது. மனதில் கொள்கை உறுதியும், அந்தக் கொள்கையை வென்றெடுப்பதற்கான லட்சிய தாகமும், லட்சியத்துக்கான உழைப்பும் அன்றாடப் பணியாக இருக்குமானால் வயதாவதே இல்லை. லட்சியவாதிகளுக்கு என்றும் வயதாவதில்லை.

நம்முடைய லட்சியத்தை வென்றடைவதற்கு அனைவரும் என்னோடு அணிவகுத்து வரும் போது, நாளுக்கு நாள் இளமையாகி விடுகிறேன். துடிப்புமிக்க இளைஞனாகி விடுகிறேன். 1980-களின் தொடக்கத்தில் இளைஞரணிச் செயலாளராக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்தேன். அதே உற்சாகத்தோடு இருக்கிறேன் என்றாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.