இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், 2019-ல் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் பேனர் மற்றும் கட் அவுட் கலாசாரத்தின் காரணமாக கோவையிலும், சென்னையிலும் இருவர் உயிரிழந்த போது, "திராவிட முன்னேற்றக் கழக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று கட்சி நிர்வாகிகள் அனைவரையும் நான் ஏற்கனவே பல முறை அறிவுறுத்தியிருக்கிறேன். இதனை மீறி வைக்கும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தோழர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கட்சித் தலைவர் 13-9-2019 அன்று அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை வெளிவந்த நாள்முதல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பெரும்பாலோர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்காமல், கட்சித் தலைவர் அவர்களின் ஆணையை பின்பற்றி வந்தனர். இதற்கு மாறாக, பேனர் வைத்த கட்சி நிர்வாகிகள் சிலர்மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்தது.