தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து யானை பலி!

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே, உணவு தேடி கிராமப்புறங்களுக்குள் நுழைந்த ஒற்றை ஆண் யானை தாழ்வாக சென்ற மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியானது.
தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து யானை பலி!


தருமபுரி: தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே, உணவு தேடி கிராமப்புறங்களுக்குள் நுழைந்த ஒற்றை ஆண் யானை தாழ்வாக சென்ற மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக பலியானது.

கடந்த நாள்களில் 4 யானைகள் மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் வன ஆர்வலர்களிடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மக்னா யானை, ஆண் யானை இரண்டும் சுற்றி திரிந்தது. இந்த யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்திய நிலையில், மக்னா யானையை, சின்னத்தம்பி கும்கி யானை உதவியுடன் பிடித்து முதுமலைக்கு கொண்டு சென்றனர். 

ஒற்றை ஆண் யானை மட்டும் பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்து வந்தது. 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் பாப்பாரப்பட்டி பகுதியில் இருந்து ஆண் யானை வெளியேறியுள்ளது. இதனை பாலக்கோடு வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 

இந்நிலையில், தருமபுரி வழியாக கம்பைநல்லூர் பகுதிகளில் வந்த காட்டு யானை சனிக்கிழமை காலை கெலவள்ளி கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பு வழியாக சென்றுள்ளது. அப்பொழுது விவசாய நிலத்தில் இருந்து ஏரிக்கரையின் மீது ஏறும்பொழுது தாழ்வாக இருந்த மின் கம்பியில், யானை உரசியது. இதில் தலை, காது பகுதிகளில் மின்சாரம் பாய்ந்து ஆண் யானை சம்பவ இடத்திலேயே பலியானது. 

இதனையடுத்து பின் தொடர்ந்து வந்த பாலக்கோடு மற்றும் மொரப்பூர் சரகங்களின் வனத் துறையினர் யானை பலியானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அறிந்த கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பலியான யானையை பார்த்துவிட்டு செல்கின்றனர். 

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக யானை நடமாட்டம் அதிகமாக உள்ள நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு மாரண்டஹள்ளி அருக ஒரே இடத்தில் மூன்று யானை உயிரிழந்தது. தொடர்ந்து சனிக்கிழமை மீண்டும் 25 வயது ஆண் யானை மின்சாரம் பாய்ந்து  பலியாகியுள்ளது. 

வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு தனது பயணத்தை தொடங்கிய ஒற்றை ஆண் யானை 17 மணி நேரம் எங்கும் நிற்காமல், யாருக்கும் பாதிப்பு கொடுக்காமல் பயணம் செய்து தனது வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com