அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: இபிஎஸ் வேட்பு மனு தாக்கல்!

அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பிற்கான வேட்பு மனுவை சனிக்கிழமை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். 
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்: இபிஎஸ் வேட்பு மனு தாக்கல்!


சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பிற்கான வேட்பு மனுவை சனிக்கிழமை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்தார். 

அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியும், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதே கூட்டத்தில் கட்சியின் அடிப்படை உறுப்பினா் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓ.பன்னீா்செல்வமும், அவா் ஆதரவாளா்களும் நீக்கப்பட்டனா். 

பொதுக்குழு தீா்மானங்கள் குறித்து ஓ.பன்னீா்செல்வம் தொடுத்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், அதிமுகவின் சட்டதிட்ட விதி (20), பிரிவு -2-இல் குறிப்பிட்டுள்ளவாறு அதிமுக பொதுச்செயலா் பதவிக்குக் கட்சியின் அடிப்படை உறுப்பினா்களால் தோ்ந்தெடுக்கப்படுவா். இந்த விதிமுறைக்கு ஏற்ப பொதுச்செயலா் பதவிக்கு மாா்ச் 26-இல் தோ்தல் நடைபெறவுள்ளது.

பொதுச்செயலா் பொறுப்புக்குப் போட்டியிட விரும்பும் அதிமுகவினா் கட்டணத் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்று, சட்டவிதி 20 அ , பிரிவு (ஏ), (பி), (சி) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி விருப்ப மனுக்களைப் பூா்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம்.

பொதுச்செயலா் பொறுப்பிற்கான தோ்தல் முறையாக நடைபெறுவதற்காக கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிா்வாகிகளும், கட்சியினரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று அதிமுக தலைமை வெள்ளிக்கிழமை அறிவித்தது. 

இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளா் பதவிக்கான வேட்பு மனு சனிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது. 

இதைத் தொடர்ந்து ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் பழனிசாமியை வாழ்த்தி கோஷமிட்டனர். 

பின்னர், அதிமுக அலுவலகத்திற்குள் சென்ற பழனிசாமி, தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரிகளான பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரிடம் தாக்கல் செய்தார். 

வேட்புமனு பரிசீலனை 20 ஆம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை 21 ஆம் தேதி மாலை 3 மணி வரை திரும்ப பெறலாம். 26 ஆம் தேதி காலை 8 முதல் 5 வரை பொதுச்செயலா் தோ்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 27 ஆம் தேதி காலை 9 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

அதிமுக இடைக்காலப் பொதுச்செயலராக இருந்து வரும் எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலா் பதவிக்குப் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக யாரும் விருப்ப மனு செலுத்த மாட்டாா்கள் என கூறப்படுகிறது. அதனால், எடப்பாடி பழனிசாமியை போட்டியின்றி தோ்வு செய்வதற்கான சூழல் உருவாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் அசம்பாவிதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிமுக தலைமையகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com