முதல்வருடன் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சந்திப்பின் முக்கியத்துவம் என்ன?

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை, நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசியது முக்கியத்துவம்
முதல்வருடன் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சந்திப்பின் முக்கியத்துவம் என்ன?

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெற உள்ள நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை, நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக பேசப்படுகிறது.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டின் பொருளாதாரச் சீர்கேட்டை சரி செய்து வருகிறார்.

இந்த நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 'திமுக கோப்புகள்' என்ற தலைப்பில் 2 ஆடியோக்களை சமீபத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். 

அதில், முதல் ஆடியோவில் திமுகவைச் சேர்ந்தவர்கள் 2 ஆண்டுகளில் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்பட்டது.  

அண்ணாமலை வெளியிட்ட 2 ஆவது ஆடியோ அதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. ஆடியோ விவகாரத்தை பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மறுத்திருந்தார். அந்த ஆடியோ புனையப்பட்டது என்றும், திமுக ஆட்சியின் நல்ல செயல்களை சீர்குலைக்கும் பாஜகவின் மலிவான தந்திரம் முயற்சி என்றும் தெளிவுபடுத்தினார். 

இந்த நிலையில் அண்ணாமலை அளித்த பேட்டியில், "ஆடியோ விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்திற்கு சென்றால் உண்மையான ஆடியோவையும், அது எங்கே, எப்போது யாரிடம் பேசப்பட்டது என்பதையும் கொடுப்பதற்கு தயாராக இருக்கிறேன்" என்று கூறினார். 

இதனால் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

இதையடுத்து கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது அலுவலகத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது. அப்போது ஆடியோ சம்மந்தமாக தனது தரப்பு விளக்கத்தை அளித்ததாக கூறப்பட்டது.

விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கக்கூடும் என்ற நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று திங்கள்கிழமை காலை மீண்டும் சந்தித்து பேசினார். சிறிது நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பு தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை செவ்வாய்க்கிழமை (மே 2) மாலை தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. 

அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதையொட்டியே முதல்வர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து பேசியதாகவும், இது சாதாரணமான சந்திப்புதான் என கூறப்படுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com