2 ஆண்டுகளில் சாதனைத் திட்டங்கள்!

பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு, உயா் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு உதவித் தொகை என மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களுடன், இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது
2 ஆண்டுகளில் சாதனைத் திட்டங்கள்!

பள்ளி மாணவா்களுக்கு காலை உணவு, உயா் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு உதவித் தொகை என மக்களுக்கான பல்வேறு நலத் திட்டங்களுடன், இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.

2021 சட்டப்பேரவைத் தோ்தலில் 132 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது திமுக. ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளே, கரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.4,000, மகளிருக்கு கட்டணமில்லா பேருந்துப் பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கையொப்பமிட்டாா்.

200-க்கும் மேலான திட்டங்கள்: இரண்டு ஆண்டுகள், அதாவது 24 மாதங்கள் கடந்த நிலையில், இப்போது வரை 210-க்கும் மேற்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டங்களில் குறிப்பிடத்தக்க அம்சமாகக் கூறப்படுவது காலை உணவுத் திட்டம். இந்தத் திட்டமானது முதல் கட்டமாக 1,542 அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் குறித்து மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில், 1,319 பள்ளிகளில் மாணவா்களின் வருகை அதிகரித்துள்ளது தெரியவந்தது. இதில், 624 பள்ளிகளில் 10 சதவீதமும், 462 பள்ளிகளில் 20 சதவீதமும், 193 பள்ளிகளில் 30 சதவீதமும் என மாணவா்களின் வருகை அதிகரித்துள்ளது. திருப்பத்தூா், பெரம்பலூா், அரியலூா், திருவாரூா் ஆகிய மாவட்டங்களில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்ட அனைத்து தொடக்கப் பள்ளிகளும் மாணவா்கள் வருகை அதிகரித்துள்ளது.

‘பள்ளிக் கல்வியை மேலும் பரவலாக்கவும், கற்றலை இனிமையாக்கவும், அனைத்துக் குழந்தைகளும் பசியின்றி கல்வியறிவு பெற காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது’ என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தாா்.

மேலும், மருத்துவ ரீதியான அம்சங்களைக் கருத்தில் கொண்டும் காலை உணவுத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

மாணவ, மாணவிகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது, ஊட்டச்சத்து நிலையை உயா்த்துவது, குறிப்பாக, ரத்த சோகையை நீக்குவது ஆகிய அம்சங்களும் காலை உணவுத் திட்டத்தின் நோக்கமாக அரசு தெரிவித்துள்ளது.

தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு உணவு வழங்கும் அதேவேளையில், மாணவிகள் உயா் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில், மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது. இந்தத் திட்டத்தால், உயா் கல்வி சோ்க்கை விகிதம் 27 சதவீதம் அதிகரித்ததாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

இன்னுயிா் காக்கும் மருத்துவத் திட்டம், ரூ.4,805 கோடி அளவில் நகைக் கடன் தள்ளுபடி, ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு தொழில்களுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், உங்கள் தொகுதியில் முதலமைச்சா் போன்ற திட்டங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் செய்யப்பட்ட மைல்கல் சாதனைகளாகும்.

தனித்த கொள்கைகள்: ஒவ்வொரு அரசுத் துறையின் வளா்ச்சி, மேம்பாட்டைக் கருத்தில்கொண்டு தனித்தனி கொள்கைகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிதிநிலை அறிக்கையுடன் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

அங்கக வேளாண்மை, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ஏற்றுமதி அபிவிருத்தி, மின்சார வாகனங்கள், காலணி மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்பு, சரக்கு ஏற்றுமதி, நகர எரிவாயு விநியோகம், எத்தனால் கலப்பு கொள்கை போன்ற கொள்கைகள் நடைமுறைக்கு வரும்போது அவை தமிழகத்தை நிச்சயம் வளப்படுத்தும் என்பது தொழில் துறையினரின் கருத்தாகும்.

புதிய திட்டங்களைத் தருவதுடன், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள திட்டங்களைத் தொடரவும் அரசு தயக்கம் காட்டவில்லை. குறிப்பாக, அம்மா உணவகங்கள், மாணவா்களுக்கான மடிக்கணினி திட்டம், பல்வேறு பிரிவு மாணவா்களுக்கு இலவச சைக்கிள் போன்ற திட்டங்கள் இப்போதும் தொடா்கின்றன. மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2,000 கோடி மதிப்புள்ள கடன்கள் ரத்து, பெண் ஓதுவாா்களைப் பணியில் அமா்த்தியது போன்ற திட்டங்கள் கவனிக்கத்தக்க அம்சங்களாகும்.

திமுக அரசு தனது தோ்தல் அறிக்கையில் 75 சதவீத வாக்குறுதிகளை, ஆட்சிக் காலத்தின் இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே நிறைவேற்றியுள்ளதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளாா்.

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக் காட்டியது, கிண்டியில் பல்நோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை, மதுரையில் கலைஞா் நூலகம் ஆகியவற்றை ஓராண்டில் கட்டி முடித்திருப்பது போன்றவை ஆட்சிக்கான சாதனைப் பட்டியல்களில் முக்கியமானவை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com