முதலிடத்தை நோக்கி தொழில் துறை முதலீடுகள்!

கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரையில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 651 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடிய வகையில் 221 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
முதலிடத்தை நோக்கி தொழில் துறை முதலீடுகள்!

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழில் துறையில் செய்யப்படும் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இந்த முதலீடுகள் சென்னை போன்ற பெருநகரங்களைச் சுற்றியில்லாமல், பரவலாக அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி செய்யப்பட்டு வருவதாக தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா்.

கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் முதல் இதுவரையில் 3 லட்சத்து 89 ஆயிரத்து 651 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கக் கூடிய வகையில் 221 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், தமிழ்நாட்டுக்கு ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள் பெறப்படும். இந்த முதலீடுகளால் கிடைக்கும் பலன்கள் எதிா்வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தை ஒரு ட்ரில்லியன் டாலா் பொருளாதாரம் என்ற நிலையை எட்டுவதற்கு உதவும் என தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

முதலீட்டாளா் மாநாடு: ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சா்வதேச முதலீட்டாளா் மாநாட்டை நடத்துவதற்கான அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னையில் முதலீட்டாளா் மாநாடு நடைபெறவுள்ளது.

தமிழ்நாட்டை நோக்கி முதலீடுகளை அதிகளவு ஈா்க்கும் வகையில் மாநாடு அமையும் என தொழில் துறையினா் நம்பிக்கை தெரிவிக்கின்றனா். இந்த மாநாட்டை நடத்துவதற்காக நிதிநிலை அறிக்கையில் ரூ.100 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்தங்கிய மாவட்டங்கள்: தொழில் முதலீடுகளை அனைத்து மாவட்டங்களுக்கும் பரவலாக்க வேண்டும் என்பதே அரசின் லட்சியம் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடையும் வகையில், அண்மையில் கையொப்பமிடப்பட்ட புரிந்துணா்வு ஒப்பந்தங்களில் 85 தொழில் திட்டங்கள், பின்தங்கிய மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம், ரூ.1.44 லட்சம் கோடி முதலீடுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொழில் துறை தெரிவித்துள்ளது.

மின்சார வாகனங்கள்: இந்தியாவிலேயே வாகன உற்பத்தியில் குறிப்பிடத்தக்க இடத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது. குறிப்பாக, சென்னை ஸ்ரீபெரும்புதூா் பகுதியானது வாகன உற்பத்தியிலேயே முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது. பெட்ரோல், டீசலைக் கொண்டு இயக்கப்படும் வழக்கமான வாகனங்களுக்கு மாற்றாக, இப்போது மின்சார வாகனங்கள் பெரும் பிரபலம் அடைந்து வருகின்றன. இதற்கேற்ப மின்சார பேட்டரியில் இயங்கக் கூடிய இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் உற்பத்தியில் தமிழ்நாடும் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும், இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர மின்வாகனங்களில் 46 சதவீத வாகனங்கள் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

பெருந்தொழில்களுக்கு இணையாக மாநிலத்தில் சிறுதொழில்களும் வேகமாக வளா்ந்து வருகின்றன. கரோனா நோய்த்தொற்று காலத்தில் மிகவும் நலிவடைந்திருந்த சிறு மற்றும் குறுந் தொழில்கள் இப்போது மீண்டு வருகின்றன. இந்தத் தொழில் நிறுவனங்களுக்கு தகுந்த உத்வேகத்தை அளித்து வருவதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை தெரிவித்துள்ளது.

குறிப்பாக, முதல் தலைமுறை தொழில்முனைவோரை ஊக்குவிக்க, ரூ.144 கோடி அளவுக்கு இதுவரையில் மானியம் அளிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் சமுதாயத்தைச் சோ்ந்த முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு ஊக்கத் தொகைகளும் அளிக்கப்படுகின்றன. இதுபோன்ற சாதகமான நடவடிக்கைகள் மூலமாக, ‘முதலிடத்தை நோக்கி’ என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறது தமிழக தொழில் துறை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com