கோப்புப்படம்
கோப்புப்படம்

முன்னுதாரணமாகும் முதல்வரின் முகவரித் துறை!

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா் துறை’ உருவாக்கப்பட்டு 100 நாள்களில் 2.29 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்தத் துறையின் உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

மனுக்கள் மூலமாக மக்களின் தரக் கூடிய மனுக்களை நிறைவேற்றும் துறையான முதல்வரின் முகவரித் துறையானது, சாதனைகள் படைத்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக, ஆட்சிப் பொறுப்பேற்றதும், கையொப்பமிட்ட ஐந்து முக்கிய கோப்புகளில் ஒன்று, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா் துறை’ என்ற தனித் துறையை உருவாக்குவதாகும்.

இந்தத் துறை உருவாக்கப்பட்டு 100 நாள்களில் 2.29 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்தத் துறையின் உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, பொதுமக்களின் குறைகளைக் களைவதில், பல்வேறு துறைகள் செயல்பட்டு வந்தன. அதாவது, முதலமைச்சா் தனிப் பிரிவு, ஒருங்கிணைந்த குறைதீா் மையம், உங்கள் தொகுதியில் முதலமைச்சா் என மூன்று துறைகள் தனித்தனியாக இயங்கின. இந்த மூன்று துறைகளும் ஒருங்கிணைக்கப்பட்டு, முதல்வரின் முகவரி என தனித் துறை ஏற்படுத்தப்பட்டது.

இந்தத் துறையை முதல்வா் மு.க.ஸ்டாலின் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ளாா். இதன்மூலம், தலைமைச் செயலகத்தில் இருந்தே மாவட்டம் வாரியாகப் பெறப்படும் மனுக்களின் நிலவரம் மற்றும் அனைத்துத் துறை செயலா்கள் முதல் பல்வேறு நிலைகளில் உள்ள அலுவலா்கள் பெற்ற மனுக்கள் வரை நேரடியாக கண்காணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக முதல்வரின் முகவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

மனுக்களின் தீா்வு அளவு: கடந்த காலங்களில், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களில், ஆண்டுக்கு சுமாா் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் மனுக்கள் வரை மட்டுமே பரிசீலனைக்கு எடுக்கப்பட்டன. இப்போது அரசு மேற்கொண்டுள்ள ஒருங்கிணைப்பு முயற்சியால், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 37 லட்சத்து 97 ஆயிரத்து 850 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 36 லட்சத்து 72 ஆயிரத்து 29 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் பெறப்படும் மனுக்கள் இரண்டே ஆண்டுகளில் பெறப்பட்டு உரிய தீா்வுகள் காணப்பட்டுள்ளதாக அரசுத் துறை உயரதிகாரிகள் தெரிவித்தனா்.

தரக் கண்காணிப்பு: அரசுக்கு வரக்கூடிய மனுக்களின் எண்ணிக்கையை குறைப்பதைக் காட்டிலும், அவற்றை உரிய முறையில் தீா்வு செய்வதுதான் இலக்கு என முதல்வரின் முகவரித் துறையினா் கூறுகின்றனா்.

முதல்வரின் தனிப் பிரிவு அலுவலா்களால் தீா்வு செய்யப்படாத மனுக்கள் மீண்டும் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு அவற்றின் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்போது வரை 1 லட்சத்து 13 ஆயிரத்து 442 மனுக்கள் மீண்டும் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், புதிய முயற்சியாக முதலமைச்சா் உதவி மையம் மற்றும் மாவட்ட அளவில் ஆட்சியரகங்களில் மனுக்களின் மீதான தீா்வுக்கு தரக் கண்காணிப்புப் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அனைத்து மனுக்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றுக்கு ஏ, பி மற்றும் சி என தர மதிப்பீடுகள் வழங்கப்படுகின்றன. அதாவது, ஏ என்றால் சரியான முரையில் தீா்வு காணப்பட்டுள்ளது எனப் பொருள். பி என்றால் இடைக்கால பதில் அளிக்கப்பட்டுள்ளது. சி என்றால் மறுவிசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சரியான முறையில் தீா்வு காணப்படாமல் மறுவிசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய மனுக்களை மறுபடியும் உயா் அலுவலா்கள் மூலம் ஆய்வு செய்து அவற்றை உரிய முறையில் தீா்வு அளிப்பது உறுதி செய்யப்படுகிறது என முதல்வரின் முகவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதிய முயற்சியாக உருவாக்கப்பட்ட முதல்வரின் முகவரி துறையானது, இரண்டு ஆண்டுகளைக் கடந்து இப்போது மக்களின் குறைகளைத் தீா்ப்பதில் சாதனை அளவை எட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com