எந்த எல்லைக்கும் செல்ல பாஜக தயாராக உள்ளது: காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரியங்க் கார்கே

அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அரசியல் சட்டத்திற்கு விரோதமாக எந்த எல்லைக்கும் செல்ல பாஜகவினர் தயாராக உள்ளனர்
எந்த எல்லைக்கும் செல்ல பாஜக தயாராக உள்ளது: காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரியங்க் கார்கே


பெங்களூரு: அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அரசியல் சட்டத்திற்கு விரோதமாக எந்த எல்லைக்கும் செல்ல பாஜகவினர் தயாராக உள்ளனர் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரியங்க் கார்கே தெரிவித்தார்.

கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல் மே 10-ஆம் தேதி நடைபெற்றது. இதில் 224 தொகுதிகளிலும் சராசரியாக 72.67 சதவீதம் வாக்குகள் பதிவாகின. 224 தொகுதி சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 2,615 வேட்பாளா்கள் போட்டியிட்டுள்ளனா். காங்கிரஸ் - 223, பாஜக - 224, மஜத - 209 தொகுதிகளில் வேட்பாளா்களை நிறுத்தியிருந்தன. இது தவிர, சிபிஐ, சிபிஎம், பகுஜன்சமாஜ்கட்சி, ஆம் ஆத்மி கட்சி, ஐஜத போன்ற பல கட்சிகள் தோ்தலில் போட்டியிட்டுள்ளன. ஆனாலும், பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகளுக்கு இடையேதான் மும்முனைப் போட்டி. 

இந்த நிலையில் தோ்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் தனிக்கட்சியாக அதிக இடங்களைக் கைப்பற்றும் என்றும், ஒரு வேளை தொங்கு சட்டப் பேரவை அமையும்பட்சத்தில் மஜதவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க திரைமறைவு அரசியல் வேலைகளில் பாஜக திட்டமிட்டு வருவதாக தெரிவித்துள்ளன.

இந்நிலையில், கா்நாடகம் முழுவதும் 58,545 வாக்குச் சாவடிகளில் 75,603 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குகள் மாநிலம் முழுவதும் 34 மையங்களில் சனிக்கிழமை (மே 13) காலை 8 மணிக்கு தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன. பெங்களூரில் 4 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. 

காலை 11.15 மணி நிலவரப்படி காங்கிரஸ்- 120, பாஜக-72, மஜத -25, பிற கட்சிகள்- 7 இடங்களில் முன்னிலை பெற்று வருகின்றன. 

சாம்ராஜ் நகர் மாவட்டம் மற்றும் பாஜகவின் கோட்டையாக கருதப்படும் குடகு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது. சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள சல்லகெரே தொகுதியில் 4 ஆவது இடத்திற்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது.

பெரும்பான்மைக்குத் தேவையான 113 இடங்களுக்கு மேலாகவே காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில், அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அரசியல் சட்டத்திற்கு விரோதமாக எந்த எல்லைக்கும் செல்வதற்கு பாஜகவினர் தயாராக உள்ளனர் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கர்நாடக வரலாற்றை திரும்பிப்பார்த்தால், கர்நாடகாதான் ஆபரேஷன் லோட்டல் மற்றும் ரிசார்ட் அரசியல் உருவான இடமாக இருக்கிறது.

தங்கள் அரசு ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக இம்முறை பாஜகவினர் ஆபரேஷன் லோட்டஸ் அரசியல் செய்ய தயங்க மாட்டார்கள். அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அரசியல் சட்டத்திற்கு விரோதமாக எந்த எல்லைக்கும் செல்வதற்கு அவர்கள் தயாராக உள்ளனர். 

இதனை பாஜக அமைச்சர் அஷோக்கின் நேற்றைய பேச்சு உறுதி செய்துள்ளது என்று பிரியங்க் கார்கே கூறினார்.

2018-ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் 104 இடங்களுடன் பாஜக தனிப்பெரும்கட்சியாக வெற்றிபெற்றது. காங்கிரஸுக்கு 80, மஜதவுக்கு 37 இடங்கள், பகுஜன்சமாஜ் கட்சி, கேபிஜேபி கட்சி, சுயேச்சைக்கு ஒரு இடம் கிடைத்தன. ஆனால், ஆட்சி அமைக்க தேவையான 113 இடம் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மஜத ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளின் கூட்டணி ஆட்சி 2019-ஆம் ஆண்டு கவிழ்ந்தது. 

இதைத் தொடா்ந்து, காங்கிரஸ், மஜத எம்எல்ஏ-க்கள் 17 பேரை ராஜிநாமா செய்யவைத்து, கட்சியில் சோ்த்துக்கொண்டு, இடைத்தோ்தலில் நிற்க வைத்து பாஜக வெற்றிபெற வைத்தது. இதனால் பாஜகவின் பலம் 116, காங்கிரஸின் பலம் 69, மஜதவின் பலம் 29 ஆக ஆனது. இதன்விளைவாக, பாஜக ஆட்சி அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com