பெரும்பாக்கத்தில் பூங்கா, விளையாட்டுத்திடல் விரைவில் ஏற்படுத்தித் தரப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு

பெரும்பாக்கத்தில் பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல் விரைவில் ஏற்படுத்தித் தரப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். 
பெரும்பாக்கத்தில் பூங்கா, விளையாட்டுத்திடல் விரைவில் ஏற்படுத்தித் தரப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு

பெரும்பாக்கத்தில் பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல் விரைவில் ஏற்படுத்தித் தரப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரான பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளை முதல்வர் விரைவுபடுத்த வேண்டுமென்ற உத்தரவின் அடிப்படையில் 50 இடங்களையும் நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய முடிவு செய்து, சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டப்பேரவை தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளில் இன்றோடு (20.5.2023) 24 இடங்களில் கள ஆய்வு செய்திருக்கின்றோம் மீதமுள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளிலுள்ள 10 திட்டங்களையும் இந்த மாத இறுதிக்குள் நேரடியாகச் சென்று களஆய்வில் ஈடுபடவிருக்கின்றோம்.

அந்த வகையில், அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளை செயல்படுத்தும் விதமாக இன்று (20.5.2023) வேளச்சேரி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட சென்னை வேளச்சேரி, 100 அடி புறவழிச்சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் கீழ் உள்ள பகுதியை ரூ.2 கோடி மதிப்பீட்டில் அழகுபடுத்துவது தொடர்பாக கள ஆய்வு செய்திருக்கின்றோம். அதேபோல, சோழிங்கநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சென்னை, பெரும்பாக்கம், சேரன் நகர், சரஸ்வதி ராஜசேகரன் சாலையில் ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் புதிய பூங்கா அமைப்பதற்கு முடிவெடுத்திருக்கின்றோம். இப்பணிகள் துவங்குவதற்கு விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் செயல்படுகின்ற சிதிலமடைந்த பள்ளிக்கூடங்களை புதுப்பித்தல், பேருந்து நிலையங்களை மேம்படுத்துதல், சலவைக் கூடங்களை மறுவளர்ச்சி  மேம்படுத்துதல், காசிமேடு கடற்கரையோரம் 5 கிலோ மீட்டர் அளவிற்கு அந்த இடத்தை அழகுபடுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் மூலம் எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒட்டுமொத்தமான சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் இந்த அறிவிப்புளை முதல்வர், சீரிய ஆலோசனையின் பேரில் வடிவமைத்த இந்தத் திட்டங்கள் அனைத்தும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆலோசனைகளைப் பெற்று அதற்கு ஏற்றாற்போல், திட்டங்களைத் திருத்தி அமைத்து, மக்களுக்காகத்தான் திட்டங்கள் என்ற வகையிலே இந்த திட்டங்களைச் செயல்படுத்துகின்ற ஒரு முன்மாதிரியான முன்னெடுப்பு சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தில் இல்லாத ஒரு புதிய நடைமுறையை துறை அதிகாரிகளுடன் சேர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. 

இந்த களஆய்வு நிச்சயம் ஒரு பயனுள்ளதாக அமையும். இந்த பகுதிகளிலுள்ள சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் அனைவருடைய உடல் நலத்தைப் பாதுகாக்கின்ற வகையிலும், அதே நேரத்தில் விளையாட்டை ஊக்குவிக்கின்ற வகையிலும், பெரும்பாக்கத்தில் விரைவில் பூங்கா மற்றும் விளையாட்டுத்திடல் ஏற்படுத்தித் தரப்படும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com