தமிழ்நாட்டிலும் உண்மை சரிபார்ப்புக் குழு! கருத்து சுதந்திரத்துக்குக் கத்தியா?

தமிழக அரசு உண்மை சரிபார்ப்புக் குழு ஒன்றை உருவாக்கியிருக்கிறது.
தமிழ்நாட்டிலும் உண்மை சரிபார்ப்புக் குழு! கருத்து சுதந்திரத்துக்குக் கத்தியா?


திமுக அரசு ஆட்சிக்கு வந்த இந்த இரண்டரை ஆண்டுகளில் அவ்வப்போது ஏதேனுமொரு சர்ச்சையில் சிக்குவதும் மெல்ல அதிலிருந்து மீள்வதுமாக நடந்துகொண்டிருக்கிறது. இப்போது விவாதத்தை ஏற்படுத்தக் கூடிய இன்னொரு பிரச்னை எழுந்திருக்கிறது.

மாநிலத்தில் போலிச் செய்திகளைப் பரப்புவர்கள், அரசுக்கு எதிராக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன் வைப்பவர்களுக்காகவே  ‘உண்மை சரிபார்ப்புக் குழு’ (Fact check) என்ற பெயரில் அமைப்பொன்றைத் தமிழக அரசு உருவாக்கியிருக்கிறது. செய்தித் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட உள்ள இந்த அமைப்பு தங்கள் பணியைத் துவங்கியுள்ளனர்.

இந்தக் குழுவின் வேலை, யாரெல்லாம் அரசுக்கு எதிராக ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை, வெறுப்புப் பேச்சுகளைச் சமூக வலைதளங்களில் பதிவிடுகிறார்களோ அவர்களைக் கண்டறிந்து தொடர்புடைய பதிவுகளை நீக்கி, தேவைப்பட்டால் அக்கருத்தைப் பதிவிடும் நபர்களைப் பற்றிய தகவல்களை அரசிடம் ஒப்படைக்க உள்ளனர். அதாவது, அரசுக்கு எதிராக இருப்பதாகக் கருதக் கூடிய  எந்தவொரு கருத்தாக இருந்தாலும் இனி ஏதேனுமொரு வகையில் வடிகட்டப்படும் அல்லது தடுத்து நிறுத்தப்படும் சூழல் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

முக்கியமாக, இந்த உண்மை சரிபார்ப்புக் குழுவை உருவாக்க அரசு ரூ.1.41 கோடியைச் செலவு செய்திருக்கிறது. மேலும், இக்குழுவிற்காக ஆண்டுக்கு ரூ. 3.5 கோடி வரை நிதி ஒதுக்கீடும் செய்ய உள்ளதாக இதற்கான அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்பந்த ஊழியர்களாகத் தொடர உள்ள இந்தக் குழுவினர் அரசிடமிருந்தே சம்பளம் பெற உள்ளனர்.

இப்பணிக்காக 80 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யார்?  இந்த ஊழியர்கள் எதன் அடிப்படையில் இந்தப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்? எந்தத் தகுதியைக் கணக்கில் கொண்டு இதன் நிர்வாக இயக்குநரை நியமித்தார்கள் என்பதெல்லாம் மக்களுக்குத் தெரிய வேண்டாமா? தெரிவிக்க வேண்டாமா?  ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியின் ஆட்சிக்காக, அதன் பிரதிநிதிகளின் மீதான குற்றச்சாட்டுகளைக் களைய பொதுமக்களின் வரிப் பணத்தைப் பயன்படுத்துவது என்பது  நியாயம் எனத் தெரியவில்லை.

அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவிற்கான அரசாணை
அரசின் உண்மை சரிபார்ப்புக் குழுவிற்கான அரசாணை

ஒரு மாநிலத்தின் நலனைக் காக்க, போலியான தகவல்களைப் பரப்பாமல் இருக்க ஒரு குழுவை உருவாக்கியிருக்கிறோம் என முறையாக சட்டப்பேரவையிலோ அல்லது தொடர்புடைய அமைச்சரோ பொதுவெளியில் கூறியிருக்க வேண்டும். எந்தவோர்   அறிவிப்பும் இல்லாமல், அரசு ஊதியம் பெறும் இந்தக் குழுவை திடீரென அறிவித்து யாருக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுக்கிறார்கள்? தெரியவில்லை.

இங்கு குறிப்பிட வேண்டிய விஷயம், கடந்த ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு இதேபோல் ஒரு உண்மை சரிபார்ப்புப் பிரிவைத் துவங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டதோடு அதற்கான சில சட்டத்திருத்தத்தையும் மேற்கொண்டது. இதை எதிர்த்து அரசியல் பகடியாளர் குணால் கம்ரா, எடிட்டர்ஸ் கில்ட் ஆப் இந்தியா உள்பட பலர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கின்றனர். இந்த வழக்கின் தீர்ப்பு வருகிற டிச.1 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்தச் சட்டத் திருத்தத்தால் அரசால் மக்கள் ஒடுக்கப்படுவதற்கான முகாந்திரம் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தது முக்கியமான ஒன்று.

மேலும், இந்த வழக்கின் ஆதாரமான குற்றச்சாட்டு, அரசுக்கு ஆதரவாக இயங்கும்  உண்மை சரிபார்ப்புப் பிரிவினர் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்களின் கருத்துகளைக் நசுக்குவார்கள் என்பதைத்தான். பத்திரிகைத் துறை என்றில்லாமல் சாமானியர்களும் அரசுக்கு எதிரான தங்கள் கருத்தை எந்த விதத்திலும் முன்வைக்கக் கூடாது என்பதையே நரேந்திர மோடி அரசு செயல்படுத்தத் திட்டமிட்டதாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.

இந்தச் சர்ச்சை வலுவானதைத் தொடர்ந்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப  இணை அமைச்சரான ராஜீவ் சந்திரசேகர் இந்தக் குழுவைக் குறித்து விரிவாக விளக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.

ஆனால், மத்தியிலுள்ள நரேந்திர மோடியின் அரசைப் பல்வேறு வகையிலும் கடுமையாக விமர்சிக்கும் திராவிட மாடல் என்றெல்லாம் முன்வைக்கும்  திமுக அரசு, மோடி அரசால் திட்டமிடப்பட்ட அதேபாணியில் அரசுக்கு ஆதரவான இந்த ‘உண்மை கண்டறியும் குழு’வைத் தமிழகத்திலும் அறிமுகப்படுத்தியுள்ளதுதான் பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும்   அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு அரசுத் துறையைப் பற்றி சாமானியர்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டால் சம்பந்தப்பட்ட துறை குற்றச்சாட்டுகளை மறுக்கவே செய்யும். அரசுக்காக செயல்படும் இந்த உண்மை சரிபார்ப்புப் பிரிவினர் அரசுத் துறைக்கு எதிராக செயல்படுவார்களா என்ன? நிச்சயம் பக்கச் சார்பான முடிவுகளையே எடுப்பார்கள். மக்களுக்காகச் செயல்பட வேண்டிய அரசு, தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் தடுத்து நிறுத்த அல்லது  தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள பொதுமக்களின் வரிப் பணத்தைச் செலவிடுவதை எவ்வாறு சரியானதாக இருக்கும்?

போலிச் செய்தி, வெறுப்புப் பேச்சு என்பதைக் குறிப்பிட்டாலும் இந்தக் குழுவின் நோக்கம் அரசின் மீது வீசப்படும் விமர்சனக் கருத்துகளை நசுக்குவதாகவே இருக்கும் என்பதாகத்தான் பத்திரிகையாளர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் அஞ்சுகின்றனர்.

பல்வேறு வகையிலும் நாட்டின் முன்னுதாரணம் இந்த திராவிட மாடல் அரசு என்று பெருமை கொள்ளும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசில், மக்களின் வரிப் பணத்தில் உருவாக்கப்படும் ஒரு குழு, யாரைக் காப்பாற்றுவதற்காகச் செயல்படவிருக்கிறது? தமிழ்நாட்டிலும் கருத்துச் சுதந்திரம் கழுத்து நெரிக்கப்படுமா? கருத்துச் சுதந்திரத்தைப் பற்றி பல மேடைகளில் உரையாற்றியவர்களின் ஆட்சியில் 8 கோடி மக்களின் கருத்துகளுக்கு ஏதேனும் சென்சார் கத்தரி விழப் போகிறதா? காத்திருக்கிறார்கள் மக்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com