மாநில அரசுகளுக்கு விரோதமாக ஆளுநர்கள் செயல்படுகின்றனர்: அப்பாவு குற்றச்சாட்டு

மாநில அரசுகளுக்கு விரோதமாக ஆளுநர்கள் செயல்படுவதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார். 
கொடுமுடியாறு அணையிலிருந்து வெள்ளிக்கிழமை பாசனத்துக்காக தண்ணீரைத் திறந்து விடுகிறார்  பேரவைத் தலைவர் மு. அப்பாவு, உடன் மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன்.
கொடுமுடியாறு அணையிலிருந்து வெள்ளிக்கிழமை பாசனத்துக்காக தண்ணீரைத் திறந்து விடுகிறார் பேரவைத் தலைவர் மு. அப்பாவு, உடன் மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன்.

களக்காடு: மாநில அரசுகளுக்கு விரோதமாக ஆளுநர்கள் செயல்படுவதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார். 

திருநெல்வேலி மாவட்டம், கொடுமுடியாறு அணையிலிருந்து பாசனத்துக்காக வெள்ளிக்கிழமை தண்ணீர் திறந்துவிடப்பட்டது. சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு, தண்ணீரைத் திறந்து வைத்தார்.

திருக்குறுங்குடி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கொடுமுடியாறு அணை நீர்மட்டம் தொடர்மழையால் அதன் முழுக் கொள்ளளவான 52.50 அடியில் 51 அடி நிரம்பியது. இதையடுத்து, அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீரைத் திறந்து விட வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு அணையிலிருந்து பாசனத்துக்காக தண்ணீரைத் திறந்துவைத்தார். இதன்படி, அணையிலிருந்து வள்ளியூரான் கால், படலையார்கால், நம்பியாறு ஆகியவற்றில் தினமும் 100 கனஅடிக்கு மிகாமல் அணையில் நீர் இருப்பைப் பொறுத்து 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்மூலம் நான்குனேரி மற்றும் வள்ளியூர் வட்டாரத்தில் உள்ள 44 குளங்களுக்கு பாசன வசதி கிடைத்து, 5781 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கா.ப. கார்த்திகேயன், பயிற்சி ஆட்சியர் கிஷன்குமார், களக்காடு நகர்மன்ற துணைத்தலைவர் பி.சி.ராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.கே. சித்திக் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் பேரவைத் தலைவர் அப்பாவுவிடம், ஆளுநர் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருப்பது குறித்துக் கேட்டனர். அப்போது, அவர் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவை, அமைச்சரவைக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் தமிழக  ஆளுநர் அதனை படித்துப் பார்ப்பதுகூட கிடையாது. கிடப்பில் போட்டுவிடுகிறார். அந்த மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என ஆளுநர் கூறுவது தவறானது. சட்டப்பேரவை, அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா இறையாண்மை கொண்டது என்பதை ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும்.

மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்துதான் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. சிம்லாவில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தலைவர்கள் பங்குபெற்ற மாநாட்டில் இதுபோன்று ஆளுநருக்கு அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கு கால நிர்ணயம் செய்ய வேண்டுமெனவும், குறிப்பாக ஒரு மாத காலம் காலக்கெடு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளேன்.

இதுவரை மத்திய அரசு எந்த முடிவும் எடுக்காத நிலையில் தமிழக முதல்வர் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார். இதுபோன்று அண்டை மாநிலமான கேரளமும் நீதிமன்றம் சென்றுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு விரோதமாக செயல்படும் ஆளுநர்களை தற்போது மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது விநோதமாக உள்ளது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com