மணல் திருட்டை தடுக்க முயன்ற விஏஓ மீது தாக்குதல்: டிடிவி தினகரன் கண்டனம்!

மணல் திருட்டைத் தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தி தப்பியோடிய சம்பவத்திற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டி.டி.வி. தினகரன் (கோப்புப் படம்)
டி.டி.வி. தினகரன் (கோப்புப் படம்)

மணல் திருட்டை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் சேகர் என்பவர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் குறித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தப்பியோடிய குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும், மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: “சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளான ஏனாவரம், புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி கிராவல் மண் அள்ளுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின்படி அங்கு சென்ற வி.ஏ.ஓ. சேகர் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. விஏஓ தாக்கப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது. 

தூத்துக்குடி மாவட்டத்தின் முறப்பநாடு வி.ஏ.ஓ. படுகொலை, திண்டுக்கல் மாவட்டத்தின் ஆயக்குடி வி.ஏ.ஓ. மீது கொலைவெறி தாக்குதல் ஆகிய சம்பவங்களைத் தொடர்ந்து தற்போது சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வி.ஏ.ஓ. மீது தாக்குதல் என தொடர்கதையாகி வரும் தாக்குதல் சம்பவங்களின் மூலம், மணல் திருட்டைத் தடுக்க திமுக தலைமையிலான தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது உறுதியாகிறது. 

சிவகங்கை தொடங்கி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையை தடுக்க முயற்சிக்கும் அரசு அதிகாரிகள் மீதே தாக்குதல் நடத்தப்படும் சம்பவம் நேர்மையான அதிகாரிகள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எனவே, மணல் திருட்டு விவகாரத்தில் தீவிர கவனம் செலுத்தி, மணல் அள்ளுவதில் வெளிப்படைத் தன்மையை உருவாக்குவதோடு, அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய நபர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com