சத்துணவில் அழுகிய முட்டைகள்: அண்ணாமலை குற்றச்சாட்டு!

ஈரோடு மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவில் அழுகிய முட்டைகள் வழங்கப்பட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு
சத்துணவில் அழுகிய முட்டைகள்: அண்ணாமலை குற்றச்சாட்டு!
Published on
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாகவும், அதைத் தொடர்ந்து மூன்று நாட்களாக முட்டை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். 

இதுகுறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுகா மற்றும் கொடுமுடி தாலுகாவில் உள்ள பல பள்ளிகளில், கடந்த புதன்கிழமை முதல் அடுத்தடுத்த நாட்களில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்திருக்கின்றன. அதனைத் தொடர்ந்து, கடந்த 3 நாட்களாக மாணவர்களுக்கு மதிய உணவில் முட்டை வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கின்றனர். 

சுமார் 2,000 முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாணவர்கள் குறித்த எந்தக் கவலையும் இல்லாமல், மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்குவதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருந்தாலும், தவறு செய்தவர்களுக்கு எந்தத் தண்டனையும் கிடைப்பதில்லை. குறைந்தபட்சம், முட்டை வழங்கும் நிறுவனங்கள் மீது கூட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு, தரமற்றதாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு அடிக்கடி எழுந்தாலும், அதுகுறித்த எந்த அக்கறையும் இல்லாமல் திமுக அரசு இருந்து வருகிறது.

குறிப்பாக, திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, எத்தனை முறை மதிய உணவில் அழுகிய முட்டைகளைக் கொடுத்தார்கள் என்பதற்குக் கணக்கே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் திமுகவுக்கு அத்தனை இளக்காரமாகி விட்டது.

உடனடியாக, மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கி அவர்கள் உயிருடன் விளையாடிக் கொண்டிருக்கும் சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com