தீபாவளி: சென்னையில் வெளியூர் பேருந்துகள் எங்கிருந்து புறப்படும்?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயம்பேடு(கோப்புப்படம்)
கோயம்பேடு(கோப்புப்படம்)

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சென்னையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

படிப்பு, வேலை நிமித்தமாக சொந்த ஊர்களை விட்டு வேறு பகுதிகளில் வாழ்வோர் பண்டிகைக் காலங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்ல வசதியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

இந்தாண்டு தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 12-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், நகரப் பகுதிகளில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக நவம்பர் 9, 10, 11ஆம் தேதிகளில் 10,975 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கும், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கும் வழக்கமாக இயக்கப்படும் 6300 பேருந்துகளுடன், கூடுதலாக 4,675 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

இந்த நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, புறநகர்ப் பகுதிகளில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலையம்

சேலம், திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருவண்ணாமலை பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து வழக்கம் போல் இயக்கப்படும்.

மாதவரம் புதிய பேருந்து நிலையம்

செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநிலப் பேருந்துகளும் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

தாம்பரம் சானடோரியம்

திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் அரசு விரைவுப் பேருந்து உள்பட அனைத்து பேருந்துகளும் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

பூவிருந்தவல்லி பணிமனை

பூவிருந்தவல்லி  வழியாக காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, ஆரணி, வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஒசூர் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் பூவிருந்தவல்லி மாநகரப் பேருந்து பணிமனை அருகிலிருந்து புறப்படும்.

கலைஞர் நகர் பேருந்து நிலையம்

கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் கலைஞர் நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம்

திண்டிவனம், செஞ்சி, வந்தவாசி வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து இயக்கப்படும்.

மேலும், நகரின் முக்கியப் பேருந்து நிலையங்களிலிருந்து தற்காலிக பேருந்து நிறுத்தங்களுக்கு செல்லும் வகையில் மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com