
அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் அரசு பேருந்து ஓட்டுநர், நடத்துனர் ஆகியோரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை கைது செய்யக்கோரி போக்குவரத்துத் தொழிலாளர் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகன் ரெஜி (45). அரசு பேருந்து ஓட்டுநர். தென்காசி மாவட்டம், முக்கூடல் அருகேயுள்ள இடைகால் கிராமத்தைச் சேர்ந்த ராமானுஜம் மகன் கண்ணன் (35) அரசு பேருந்து நடத்துனர். இருவரும் புதன்கிழமை (நவ. 15) மாலை 6.30 மணியளவில் பாபநாசம் பணிமனையில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்தை இயக்கினர்.
கல்லிடைக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் மோட்டார் பைக்கில் வந்த மூவர் பேருந்தை வழி மறித்து நிறுத்தி, இருவர் பேருந்தில் ஏறியுள்ளனர். இதற்கு பேருந்து ஓட்டுநர் ரெஜி கண்டித்துள்ளார். இதுகுறித்து பேருந்தில் பயணித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் விட்டுச் சென்றவரிடம் தகவல் தெரிவித்ததையடுத்து ஆத்திரமடைந்த மோட்டார் பைக்கில் வந்தவர் மற்றும், பேருந்தில் பயணித்த மூவரும் சேர்ந்து வீரவநல்லூரில் நிறுத்தத்தில் பேருந்து நின்றபோது ஓட்டுநர் ரெஜியை அரிவாளால் வெட்டினர். இதனை தடுக்க வந்த நடத்துனர் கண்ணனையும் அவர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்று விட்டனர்.
இதையடுத்து இன்று காலை அரசுப் போக்குவரத்துக் கழக பாபநாசம் பணிமனையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி அனைத்து ஓட்டுநர், நடத்துனர்களும் பேருந்துகளை இயக்காமல் வீரவநல்லூரில் ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்வது, பாதிக்கப்பட்வருக்கு இழப்பீடு வழங்குவது, காயம்பட்டவர் குணமாகும் வரை மருத்துவ விடுப்பில் கழிக்காமல் பணி நாட்களாகக் கொள்வது உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களும் பேருந்துகளை இயக்காமல் சுமார் இருநூறுக்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 60க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பூன்ராஜ், சுப்பிரமணியன், சசிக்குமார், அம்பாசமுத்திரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சதீஷ் குமார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.