உடற்பயிற்சியின்போது பெண் மருத்துவர் பலி: தொடரும் சோகம்..

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்த பெண் மருத்துவர் மாரடைப்பு ஏற்பட்டு பலியானார்.
உடற்பயிற்சியின்போது பெண் மருத்துவர் பலி: தொடரும் சோகம்..

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில், உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்த பெண் மருத்துவர் மாரடைப்பு ஏற்பட்டு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் அன்விதா (24). இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்துவிட்டு தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இவர் சென்னையில் புகழ்பெற்ற கண் மருத்துவரின் மகளாவார். 

இவர் சென்னை கீழ்ப்பாக்கத்தில், புதிய ஆவடி சாலையில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் புதன்கிழமை மாலை உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்து பலியாகியுள்ளார்.

உடற்பயிற்சிக் கூடத்துக்கு இவர் உடல் எடையை குறைக்க வந்ததாகவும், அதிக நேரம் உடற்பயிற்சி செய்ததால் பெண் மருத்துவர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது. உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் செய்தி மற்ற உடற்பயிற்சியாளர்கள் மத்தியில்  அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் பிரதான சாலையில் உள்ள உடற் பயிற்சி மையத்தில் எடையை குறைக்க வேண்டி மருத்துவர் அன்விதா (24) தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது வந்துள்ளார்.

தொடர்ந்து உடலை ஸ்லிம் ஆக்க வேண்டும் என்று நேற்று மாலை உடற்பயிற்சிக் கூடத்துக்குச் சென்று உடற்பயிற்சி செய்துள்ளார். அப்போது அவர் அதிக நேரம் உடற்பயிற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.

உடற்பயிற்சிக் கூடத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உடனே பயிற்சியாளர்கள்  அவரை அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப்  பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மருத்துவர்கள் சோதனை செய்ததில், அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என அரசு மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைக் கேட்டு உடற்பயிற்சி கூட பயிற்சியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏற்கனவே, நல்ல ஆரோக்கியத்துடன் கட்டுக்கோப்பான உடலுடன் இருந்து, தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்கள், உடற்பயிற்சிக் கூடத்திலேயே உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு பலியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது, பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

முன்பெல்லாம் உடற்பயிற்சி செய்யாதவர்கள்தான் தங்களுக்கு மாரடைப்பு வந்துவிடுமோ என்று அச்சம்கொள்வார்கள். ஆனால், அவர்களை விடவும், இதுபோன்ற பலி சம்பவங்களால், உடற்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு அச்சம் தொற்றிக்கொண்டிருக்கிறது என்பது மட்டும் நிதர்சனம்.

கரோனா தொற்றுக்குப் பிறகு இளம் வயதினர் மாரடைப்பால் பலியாவது அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் இதுவரை கண்டறியப்படாவிட்டாலும், கரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்று மக்கள் மத்தியில் பரவலான சந்தேகம் நிலவுகிறது. இதுவரை இது எங்கும் உறுதிசெய்யப்படவில்லை.

உடற்பயிற்சிக் கூடங்களில் பயிற்சி செய்துகொண்டிருப்பவர்கள் பலியானது சாதாரண செய்திகளாக இருந்துகொண்டிருந்த நிலையில், மிகப் பிரபலமான நடிகர்கள், சமூகத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் உடற்பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்பட்டு பலியான சம்பவங்கள் வெளியான பிறகுதான், இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கின.

மிகப்பெரிய நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீவத்சவா, உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். முன்னதாக, அவர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு முறை சிபிஆர் சிகிச்சை அளித்து இதயத்தை மீண்டும் செயல்பட வைக்கும் சிகிச்சைகளும் கைகொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், மிகப் பிரபலமான, சித்தார்த் சுக்லா, சித்தாந்த் வீர் சூர்யவன்ஷி, அமித் மிஸ்த்திரி போன்றவர்கள் நல்ல திடகாத்திரமாக உடல்வாகுடன் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு பலியானது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கெல்லாம் முன்பு, கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் புனீத் ராஜ்குமார், உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு பலியான சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது இங்கே நினைவுகூரத்தக்கது.

இதற்கிடையே, காஸியாபாத்தில் 21 வயது இளைஞர் பயிற்சி செய்துகொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு பலியான விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை அதிகரித்திருந்தது.

தொடர்ந்து, சென்னையிலும் உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும்போதே இளைஞர்கள் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்த சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்தபடிஇருந்தது பலருக்கும் சந்தேகங்களையும் அச்சங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com