வாலாஜாபேட்டை அருகே ராட்சத அமிலம் டேங்க் வெடித்து விபத்து!

வாலாஜாபேட்டை அடுத்த முசிறி பகுதியில் ரசாயன ஆலையில் ராட்சத அமிலம் டேங்க் திடீரென வெடித்து தொழிற்சாலை வளாகம் முழுவதும் பரவி சுவாச பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினர்
மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினர்

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த முசிறி பகுதியில் ரசாயன ஆலையில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத அமிலம் டேங்க் திடீரென வெடித்து தொழிற்சாலை வளாகம் முழுவதும் பரவி சுவாச பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையை அடுத்த தென்கடப்பந்தங்கள் முசிறி செல்லும் சாலையில் அமைந்துள்ள சன்பிக்ஸ் என்ற ரசாயன ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு ரசாயனங்கள் மற்றும் அமிலங்கள் தயாரிக்கபடுகிறது. இங்கு அமிலங்களை தேக்கி வைக்க 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 டேங்குகள் உள்ளன.  

இந்த நிலையில் தோல் தொழிற்சாலை மற்றும் பல்வேறு தொழிற்சாலையில் கழிவு நீர் சுத்திகரிக்க பயன்படுத்தப்படும் பாலி அலுமினியம் குளோரைடு அமிலம் தேக்கி வைக்கப்பட்டிருந்த ராட்சத டேங்க் வெள்ளிக்கிழமை காலை திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது. 

முசிறி பகுதியில் ரசாயன தொழிற்சாலையில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத அமிலம் டேங்க் திடீரென வெடித்து தொழிற்சாலை வளாகம் முழுவதும் பரவியது.

இந்த அமிலம் தொழிற்சாலை முழுவதும் பரவி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக உருவாகும் நச்சு புகையால் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது.

அமிலம் டேங்க் உடைந்து வெளியான அமிலத்தின் நச்சுத் தன்மை குறைவானது என்பதால் அதிர்ஷ்டவசமாக தொழிற்சாலையில் பணியாற்றிய 7-க்கும் மேற்பட்டோருக்கு கண் எரிச்சல், சுவாச கோளாறு உள்ளிட்ட சிறு பாதிப்போடு உயிர் தப்பினர்.

சுவாச கருவிகளை பயன்படுத்தி புகையை கட்டுப்படுத்தும் பணியில் ராணிப்பேட்டை தீயணைப்பு குழுவினர்.

இது குறித்த தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 10 பேர் அடங்கிய ராணிப்பேட்டை தீயணைப்பு குழுவினர் சுவாச கருவிகளை பயன்படுத்தி தண்ணீரை பீச்சி அடித்தும், எம் சாண்டை கொட்டியும் அமிலத்தின் வீரியம் மற்றும் வெளியாகும் புகையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிற்சாலை அருகே குடியிருப்புகள் இல்லாததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இருப்பினும், அருகில் உள்ள கால்குவாரி மற்றும் கிரஸ்சர்கள் செயல்பட்டு வருவதால் அதில் பணியாற்றும் பணியாளர்களுக்கு கண்ணெரிச்சல், மூச்சு திணறல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து விபத்துக்குள்ளான தொழிற்சாலையை மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட அலுவலர் ரவிச்சந்திரன் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் விபத்து குறித்து தொழிற்சாலை நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். விசாரணை நிறைவடைந்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com