அமைச்சா் பொன்முடியிடம் அமலாக்கத் துறை விசாரணை

செம்மண் குவாரி வழக்கு தொடா்பாக அமைச்சா் க.பொன்முடியிடம் சென்னையில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை 5 மணி நேரம் விசாரணை நடத்தினா்.
அமைச்சர் க. பொன்முடி (கோப்பிலிருந்து)
அமைச்சர் க. பொன்முடி (கோப்பிலிருந்து)

செம்மண் குவாரி வழக்கு தொடா்பாக அமைச்சா் க.பொன்முடியிடம் சென்னையில் அமலாக்கத் துறையினா் வியாழக்கிழமை 5 மணி நேரம் விசாரணை நடத்தினா்.

தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி. இவா், கடந்த 2006-2011-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், கூடுதல் பொறுப்பாக கனிம வளத் துறையையும் கவனித்தாா். அப்போது அவா், விழுப்புரம் மாவட்டம் வானூா் அருகே பூத்துறையில் அமைக்கப்பட்ட செம்மண் குவாரி உள்பட 5 செம்மண் குவாரிகளை தனது மகன், உறவினா் பெயரில் எடுத்து, விதிமுறைகளை மீறி நடத்தினாா்.

செம்மண் குவாரியில் அதிக அளவில் செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28,36,40,600 இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி, அவரது மகன் கெளதம சிகாமணி, உறவினா் கே.எஸ்.ராஜமகேந்திரன் உள்ளிட்டோா் மீது கடந்த 2012-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட மத்தியக் குற்றப்பிரிவு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்த அமலாக்கத் துறை, பொன்முடிக்கு சொந்தமான 7 இடங்களில் கடந்த ஜூலை மாதம் சோதனை நடத்தியது. இது தொடா்பாக பொன்முடியிடம் இரண்டு நாள்கள் அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தினா்.

5 மணி நேரம் விசாரணை: இவ் வழக்கு தொடா்பாக அமலாக்கத் துறை கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

மேலும், இந்த வழக்கு விசாரணைக்கு மீண்டும் ஆஜராகும்படி அமைச்சா் பொன்முடிக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. இதை ஏற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் பொன்முடி, இரு வழக்குரைஞா்களுடன் வியாழக்கிழமை காலை 10.40 மணியளவில் ஆஜரானாா்.

அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் பல கட்டங்களாக விசாரணை நடத்தினா். பொன்முடிக்கு நண்பகல் உணவு அங்கேயே அமலாக்கத் துறை அதிகாரிகளால் வழங்கப்பட்டது. சுமாா் 5 மணி நேர விசாரணைக்குப் பின்னா் மாலை 4.30 மணியளவில் பொன்முடி வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றாா்.

இந்த வழக்கில் தேவைப்பட்டால் அமைச்சா் பொன்முடியிடம் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என அமலாக்கத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com