செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு: தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்
கோப்புப்படம்
கோப்புப்படம்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமலாக்கத் துறை அதிகாரிகள், செந்தில் பாலாஜியை கைது செய்தனா். பின்னா், அவரை 5 நாள்கள் காவலில் எடுத்து விசாரித்தனா். விசாரணை முடிந்து, ஆக. 12-ஆம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல், கடந்த செப். 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆஜா்படுத்தப்பட்டாா். இதைத்தொடா்ந்து, அவரது நீதிமன்ற காவலை அக். 13 வரை நீட்டித்து சென்னை முதன்மை அமா்வு நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தாா்.

இந்நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்ததையடுத்து, சென்னை மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிபதி லிங்கேஸ்வரன் முன் புழல் சிறையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரது நீதிமன்றக் காவலை அக். 20-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக்காவல் 8-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டது.

அதனையடுத்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கு திங்கள்கிழமை சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத் துறை சார்பில், செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களின்படி, ரூ.67 கோடி ரூபாய் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருப்பதாக தெரிகிறது. ஸ்டான்லி மருத்துவமனை அறிக்கையின்படி செந்தில் பாலாஜி வெளிமருத்துவமனையில் சிகிச்சை பெறத் தேவையில்லை. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாது என்ற நிலை இருந்தால் மருத்துவக் காரணத்திற்கு ஜாமீன் வழங்கலாம் என வாதிடப்பட்டது. 

“செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியைக் கலைப்பார் என்று அமலாக்கத் துறை கூறுவதால், செந்தில் பாலாஜிக்கு சிறை மருத்துவமனையிலேயே சிகிச்சை அளிக்க முடியாதா?” என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு செந்தில் பாலாஜி தரப்பில், வழக்கின் ஆவணங்கள் அமலாக்கத் துறையிடம் இருக்கும்போது சாட்சிகளை எப்படி கலைக்க முடியும், நீதிமன்றமே மருத்துவரை நியமித்து செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.  

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com