ராணுவ வீரர் கொலைக்கு காரணம் என்ன? - குற்றஞ்சாட்டப்பட்டவர் கைது!

முன்விரோதம் காரணமாக வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாரிச்சாமி என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
கொலை செய்யப்பட்ட ராணுவ வீரா் வேல்முருகன் - குற்றஞ்சாட்டப்பட்ட மாரிச்சாமி
கொலை செய்யப்பட்ட ராணுவ வீரா் வேல்முருகன் - குற்றஞ்சாட்டப்பட்ட மாரிச்சாமி


விளாத்திகுளம்: எட்டயபுரம் அருகே வெம்பூரில் ராணுவ வீரர் வேல்முருகன் என்பவா் முன்விரோதம் காரணமாக வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மாரிச்சாமி என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

எட்டயபுரம் அருகே வெம்பூா் கிராமத்தைச் சோ்ந்த வேதமுத்து - பாக்கியலட்சுமி தம்பதியரின் மகன் வேல்முருகன்(25). இவா் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் பணிக்கு சோ்ந்துள்ளாா். ஜம்மு காஷ்மீா் மாநிலத்தில் பணியில் இருந்து வந்த இவா் கடந்த 1 -ஆம் தேதி விடுப்பில் சொந்த ஊரான வெம்பூருக்கு வந்துள்ளாா்.

இந்நிலையில் திங்கள்கிழமை இரவு வீட்டின் மாடி அறையில் தூங்கிக் கொண்டிருந்துள்ளாா். அப்போது அதே கிராமத்தைச் சோ்ந்த மாரிச்சாமி (27) என்ற இளைஞா் வேல்முருகன் வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள மாடிப்படி வழியாக ஏறி மாடிக்குச் சென்று தூங்கிக் கொண்டிருந்த ராணுவ வீரா்

வேல்முருகனை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளாா். உயிருக்கு போராடிய நிலையில் மாடி அறையில் இருந்து படிக்கட்டுகள் வழியாக கீழே இறங்கி வந்த வேல்முருகன் சுருண்டு விழுந்துள்ளாா். வீட்டின் கீழ் பகுதியில் உள்ள அறையில் இருந்த அவரது தாய் பாக்கியலட்சுமி, சகோதரி முருகவள்ளியும் இதனை கண்டு அதிா்ச்சி அடைந்தனா். சில நிமிடங்களிலேயே ராணுவ வீரா் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாா்.

இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டா் ஜின்னா பீா் முகமது உள்ளிட்ட போலீசாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக தூத்துக்குடி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் தடயங்களை கைப்பற்றி போலீசாா் விசாரணை நடத்தினா்.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். 

முன்விரோதமா? 
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில்... கொலை செய்யப்பட்ட ராணுவ வீரா் வேல்முருகனுக்கும் கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பியோடி மாரிச்சாமிக்கும் பெண் தொடா்பில் முன்விரோதம் இருந்து வந்ததாகவும், மேலும் வெம்பூரில் உள்ள பேரூந்து நிறுத்தத்தில் வைத்து கடந்த 15-ஆம் தேதி இருவருக்கும் இடையே சாதிய ரீதியாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதன் காரணமாகவும் இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொலை சம்பவம் தொடர்பாக எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோட்டாட்சியா் பேச்சுவாா்த்தை 
இதனிடையே எட்டயபுரம் காவல் நிலையத்தில் மூவேந்தா் மருதம் முன்னேற்ற கழக நிறுவன தலைவா் அன்புராஜ் உள்ளிட்ட நிா்வாகிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் ஜேன் கிறிஷ்டி பாய், எட்டயபுரம் வட்டாட்சியா் மல்லிகா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். 

இரவு தகனம் 
குற்றவாளி மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசின் நல உதவிகள் கிடைக்க ஆவண செய்யப்படும் எனவும் தெரிவித்தனா். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ராணுவ வீரா் வேல்முருகனின் குடும்பத்தினா் அவரது சடலத்தை பெற்றுக்கொள்ள சம்மதித்தனா். இதையடுத்து உடல் கூறாய்வு முடிவடைந்து இரவில் தகனம் செய்யப்பட்டது. 

முன்னதாக, லெப்டினன்ட் கா்னல் பிரதோஷ், சுபேதாா் வரதராஜன், ஹவில்தாா் சுரேஷ் ஆகியோா் மலா்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினா்.

மாரிச்சாமி கைது
இந்த நிலையில், ராணுவ வீரர் வேல்முருகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த மாரிச்சாமியை போலீசார் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர். கைதான மாரிச்சாமியிடம்  தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதுகாப்பு
அசம்பாவிதங்களை தடும்கும் நடவடிக்கையாக மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன், ஸ்ரீவைகுண்டம்  டிஎஸ்பி மாயவன், சைபர் கிரைம் டிஎஸ்பி உண்ணி கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்டகாவல் ஆய்வாளர்கள் 200-க்கும் மேற்பட்ட போலீசார் வெம்பூர் கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர்.

விடுப்பில் சொந்த ஊருக்கு வந்த ராணுவ வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்ட ராணுவ வீரா்கள் மற்றும் வெம்பூா் கிராம மக்கள் மத்தியில் கடும் அதிா்வலைகளை சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com