58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயதுவரம்பு உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
58 வயது வரை ஆசிரியர் பணியில் சேரலாம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு


சென்னை: ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயதுவரம்பு உயர்த்தப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது தமிழ்நாடு அரசு.

சமீபத்தில் சென்னையில் சம வேலை சம ஊதியம், சம்பள உயர்வு, பணி நிரந்தரம் மற்றும் ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது வரம்பை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆசிரியர்களின் போராட்டத்திற்குப் பிறகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்பில் ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பு உயர்த்தப்படும் என தெரிவித்தார். அதன்படி, ஆசிரியர் பணியில் சேர்வதற்கான வயது வரம்பை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என்று அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியர்களை நேரடி நிர்ணயம் செய்வதற்கான உச்ச வயது வரம்பானது தற்பொழுது மாற்றப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

பொதுப்பிரிவினர் ஆசிரியர் பணியில் சேர 53 எனவும், இதர பிரிவினர் 58 வயதாகவும் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக பொதுப்பிரிவினருக்கு 45 ஆகவும், இதர பிரிவினருக்கு 50 ஆகவும் வயதுவரம்பு இருந்தது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் அரசாணையை பதிவிட்டுள்ளார். 

அதில், 4.10.2023 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 53 எனவும், இதரப் பிரிவினருக்கு 58 எனவும் நிர்ணயம் செய்யப்படும் என அறிவித்திருந்தோம். அதன்படி 17 நாள்களிலேயே சொன்னதை செய்து முடித்து தற்போது அரசாணையையும் வெளியிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆசிரியப் பெருமக்களின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்." எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com