'உள்ளே வெளியே' நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி : முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்த அனைத்துத் தேர்தலிலும் தோற்றவர் பழனிசாமி. வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் முழுமையாகத் தோற்கடிக்கப்படுவார்.
'உள்ளே வெளியே' நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி : முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திருவண்ணாமலை: கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்த அனைத்துத் தேர்தலிலும் தோற்றவர் பழனிசாமி. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்தால் டெபாசிட் கூட தேறாது என்று திட்டம் போட்டு, டெபாசிட்டைக் காப்பாற்றிக் கொள்ள தனியாகப் பிரிந்த மாதிரி ’உள்ளே வெளியே’ நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 

முதல்வர் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை (அக். 22) திருவண்ணாமலையில் நடைபெற்ற வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். 

அப்போது, சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, திமுக ஆட்சிக்கு வந்து எந்த ஒரு புதிய திட்டத்தையும் கொண்டுவரவில்லை. அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களைதான் ரிப்பன் வெட்டி நாம் தொடங்கி வைக்கிறோம் என்று பேசியிருக்கிறார். இந்த இரண்டரை ஆண்டில் அவ்வளவு சாதனைகளை செய்திருக்கிறோம்.

மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோமே? அது நீங்கள் போட்ட திட்டமா? விடியல் பயணம் - பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் நீங்கள் போட்ட திட்டமா? காலைச் சிற்றுண்டித் திட்டம், புதுமை பெண் திட்டத்தில், மாணவியர்க்கு ரூ.1000. இது பழனிசாமியின் திட்டமா? ’நான் முதல்வன் திட்டம்’ அதிமுக திட்டமா? மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோமே? அது நீங்கள் போட்ட திட்டமா? அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகி வருகிறார்களே? ஆட்சிக்கு வந்து 1000 நாட்கள் கூட ஆகவில்லை, ஆயிரம் கோயில்களில் குடமுழுக்கு நடத்தியிருக்கும் ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி. இது எதுவும் பழனிசாமி கண்ணுக்கு ஏன் தெரியவில்லை? தெரிந்து கொள்ள விரும்பவில்லையா? இல்லை, இன்னும் தரையிலேயேதான் ஊர்ந்துகொண்டு இருக்கிறாரா? தலையைக் கொஞ்சம் தூக்கிப் பாருங்கள் பழனிசாமி அவர்களே. தமிழ்நாடு மாறிக் கொண்டிருக்கிறது!

நான்காண்டுகாலம் ஆட்சி அதிகாரம் இருந்தபோது மக்களுக்காக எதையுமே செய்யாமல், இப்போது பதவி பறிபோன பிறகு, தன்னைப் போலவே எல்லாரும் இருப்பார்கள் என்று நினைக்கிறார் பழனிசாமி. மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டார்கள் என்று நினைத்துவிட்டார் போல. அதனால்தான் பொய் பொய்யாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

சம்பந்திக்கும், சம்பந்தியின் சம்பந்திக்கும் காண்ட்ராக்ட் கொடுத்து, உயர்நீதிமன்றம்-உச்ச நீதிமன்றம் என்று ஓடிக்கொண்டே இருக்கும் உங்களுக்கு, குடும்பக் கட்சி என்று விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை.

கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்த அனைத்துத் தேர்தலிலும் தோற்றவர் பழனிசாமி. வருகிற நாடாளுமன்றத் தேர்தலிலும் முழுமையாகத் தோற்கடிக்கப்படுவார். பாஜக கூட்டணியில் இருந்தால் டெபாசிட் கூட தேறாது என்று திட்டம் போட்டு, டெபாசிட்டைக் காப்பாற்றிக் கொள்ள தனியாகப் பிரிந்த மாதிரி 'உள்ளே வெளியே' நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்.

சிறுபான்மை இனத்தவர் மீது திடீர் என்று பாசம் பொங்குகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்புரிமை ரத்து, முத்தலாக் தடை என்று எல்லா சட்டத்தையும் கண்ணை மூடி ஆதரித்தவர் பழனிசாமி. அதை எதிர்த்த திமுகவினரைச் சட்டப்பேரவையிலேயே எப்படியெல்லாம் பேசினார், பாஜகவிற்கு எப்படியெல்லாம் பல்லக்கு தூக்கினார் என்று எல்லோருக்கும் நன்றாக தெரியும். “குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் யார் பாதிக்கப்பட்டார்கள்” என்று கேட்டார் பழனிசாமி. இப்படியெல்லாம் ஆணவத்தோடு பேசிவிட்டு, இப்போது, ‘கூட்டணி தர்மம்’ என்று சப்பைக்கட்டு கட்டி தன்னுடைய நாடகத்திற்கு ஸ்க்ரிப்ட் எழுதிக்கொண்டு இருக்கிறார்.

ஆனால் மக்கள் இப்போதும் என்ன கேட்கிறார்கள், "மக்களை காவு கொடுத்துவிட்டு எதற்காக கூட்டணி வைத்தார்?" பாஜகவை விமர்சிக்காமலேயே பாஜகவிற்கு எதிராக கூட்டணி அமைக்கிறேன் என்று அவர் போடும் நாடகம், மிகப்பெரிய நரித்தனத்தின் அடையாளம். இவ்வாறெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் ஆட்டுவிக்கப்படுகிறார். தேர்தல் நெருங்க நெருங்க அதுவும் அம்பலம் ஆகிவிடும்.

தேர்தல் என்ற போர்க்களம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளாக தமிழ்நிலத்தில் அதிகமான போர்கள் நடந்த மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம்.

முதலாம் தெள்ளாற்றுப் போர் - இரண்டாம் தெள்ளாற்றுப் போர்-திருவண்ணாமலைப் போர்- வந்தவாசிப் போர்- தேசூர்ப் போர் - ஆரணிப் போர் - செங்கம் கணவாய்ப்போர் - சேத்துப்பட்டில் போர் என்று வரிசையாக எத்தனையோ போர்க்களங்களைப் பார்த்த ஊர், இந்தத் திருவண்ணாமலை வட்டாரம்.

இப்போது நாம் இந்திய ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தில் நிற்கிறோம். இந்த தேர்தல் களத்தில் நாம் காணப் போகும் வெற்றிதான் - எதிர்கால இந்தியாவிற்கு மிக மிக முக்கியம்.

100 ஆண்டு காலமாக சமூகநீதியின் மூலமாக தமிழ்நாடு பல்வேறு முன்னேற்றங்களை அடையத் தொடங்கியது. கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் திமுக ஆட்சி எத்தனையோ முன்னெடுப்புகளை செய்திருக்கிறது. தொடர்ந்து இப்போது இந்தியாவே தலைநிமிர்ந்து பார்க்கும் ஆட்சியை நடத்தி வருகிறோம். இந்த திராவிட மாடல் கோட்பாடானது - இந்தியா முழுமைக்கும் செயல்படுத்தப்படுமானால் - உலகில் தலைசிறந்த நாடாக இந்தியா உயரும்.

மக்களைப் பிளவுபடுத்தி அடிமைப்படுத்தும் பாசிச பா.ஜ.க.விற்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் களத்திற்கு இந்தத் திருவண்ணாமலை பாசறைக் கூட்டமானது நல்ல வழிகாட்டியாக அமையட்டும்.

தீபம் தெரிவதைப் போல - இந்தியாவிற்கான நம்பிக்கை ஒளி தெரிகிறது என முதல்வர் ஸ்டாலின் பேசினார். 

=

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com