கருக்கா வினோத்தை பிணையில் எடுத்தது யார்? திமுக - பாஜக இடையே மோதல்

கருக்கா வினோத்தை பிணையில் எடுத்தது யார் என்ற விவாதம் எக்ஸ் பக்கத்தில் எழுந்துள்ளது. இது குறித்து திமுக-பாஜக இடையே கடும் மோதல் வெடித்துள்ளது.
கருக்கா வினோத்தை பிணையில் எடுத்தது யார்? திமுக - பாஜக இடையே மோதல்

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரெளடி கருக்கா வினோத்தை பிணையில் எடுத்தது யார் என்ற விவாதம் எக்ஸ் பக்கத்தில் எழுந்துள்ளது. இது குறித்து திமுக-பாஜக இடையே கடும் மோதல் வெடித்துள்ளது.

ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ரெளடி கருக்கா வினோத் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறை சென்றவர் என்றும், தற்போது பிணையில் வெளியே வந்திருந்த நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திமுக தகவல் தொழில்நட்ப அணி வெளியிட்ட எக்ஸ் பதிவில், முந்தைய வழக்கில், கருக்கா வினோத்தை பிணையில் எடுத்த வழக்குரைஞர் முத்தமிழ் செல்வகுமார் என்றும், அவர் பாஜகவில் மாவட்ட வழக்குரைஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருப்பதாகக் கூறி அது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

கருக்கா வினோத்தை பிணையில் எடுத்தது பாஜக வழக்குரைஞர் என்றும், அம்பலமானது பாஜகவின் தனக்குத் தானே வெடிகுண்டுத் திட்டம் எனவும் திமுக விமரிசித்துள்ளது.

இதற்கு பதிலளிக்கும் வகையில், பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், கருக்கா வினோத்தை முந்தைய வழக்கு ஒன்றில் பிணையில் விடுவிக்க கையெழுத்திட்டது திமுகவை சேர்ந்தவர்கள்தான் எனக் கூறி அதற்கு உரிய புகைப்படங்களையும் பாஜக வெளியிட்டுள்ளது.

மேலும், பாஜக தரப்பில் முத்தமிழ் செல்வன், தமிழக பாஜகவிலிருந்து 2021ஆம் ஆண்டே விலகிவிட்டார், அவரது அனுமதியில்லாமல், திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டியும், நிசோக் என்பவரும்தான் வினோத்தை ஜாமீனில் எடுத்துள்ளனர் என்றும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்கு ஆளுநர் மாளிகை அளிக்கும் அழுத்தமும், அதீத கவனமும் ஒருபக்கம் என்றால் மற்றொரு பக்கம் குற்றவாளி யார் என்பதிலும் ஒரு அரசியல் மோதல் நடக்கிறதே என்று சமூக வலைத்தளங்களில் மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆளுநர் மாளிகை அருகே நடந்தது என்ன?

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையின் முதலாவது நுழைவு வாயில் முன்பு புதன்கிழமை (அக்.25) இரு பெட்ரோல் குண்டுகளை அடுத்தடுத்து வீசியதாக நந்தனம் பகுதியைச் சோ்ந்த ரெளடி கருக்கா வினோத்தை போலீஸாா் கைது செய்தனா். சம்பவத்தின்போது, ஆளுநா் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் இருந்த தலைமைக் காவலா் மோகன் அளித்த புகாரின் பேரில், பொது கட்டடத்துக்கு தீ வைத்து சேதப்படுத்த முயற்சிப்பது, அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுப்பது, கொடூரமான ஆயுதங்களைப் பயன்படுத்தி கொலை மிரட்டல் விடுப்பது, வெடி பொருளைப் பயன்படுத்தி ஒருவரது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது அல்லது சொத்தை சேதப்படுத்துவது, பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பது ஆகிய 5 சட்டப் பிரிவுகளின் கீழ் வினோத் மீது கிண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கைது செய்யப்பட்ட வினோத், சைதாப்பேட்டை நீதித்துறை நடுவா் சந்தோஷ் முன் புதன்கிழமை நள்ளிரவு ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை நவம்பா் 9-ஆம் தேதி வரை காவலில் வைக்கும்படி நீதித் துறை நடுவா் உத்தரவிட்டாா். இதையடுத்து வினோத்தை புழல் சிறையில் அடைக்க போலீஸாா் அழைத்துச் சென்றனா். நள்ளிரவு என்பதால் வினோத்தை சிறைக்குள் அடைப்பதற்கு சிறைத் துறை அதிகாரிகள் மறுத்தனா். இதனால் அவா், இரவு முழுவதும் காவல் துறை வாகனத்திலேயே வைக்கப்பட்டிருந்தாா். வியாழக்கிழமை காலையில் சிறையில் வினோத் அடைக்கப்பட்டாா்.

முதல் தகவல் அறிக்கை

இந்தச் சம்பவம் தொடா்பான முதல் தகவல் அறிக்கை வியாழக்கிழமை வெளியானது. தலைமைக் காவலா் காவலா் மோகன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. 

அதில் அவா் கூறியிருப்பதாவது: சம்பவத்தன்று நான் ஆளுநா் மாளிகையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தேன். ஆளுநா் மாளிகையில் உள்ள முதலாவது நுழைவு வாயில் நோ் எதிா்புறம் உள்ள நடைப்பாதையில் இருந்து ரெளடி கருக்கா வினோத் 2 பெட்ரோல் குண்டுகளை தீப்பற்ற வைத்து வீசினாா்.

முதல் பெட்ரோல் குண்டு ஆளுநா் மாளிகையின் பிரதான நுழைவு வாயில் முன் இருந்த இரும்பு தடுப்பு அருகே பலத்த சப்தத்துடன் விழுந்து வெடித்தது. உடனே நானும், என்னுடன் பணியில் இருந்தவா்களும் அவரைப் பிடிப்பதற்காக ஓடியபோது, மேலும் ஒரு பெட்ரோல் குண்டை தீப்பற்ற வைத்து, எங்களை நோக்கி வீசினாா். அது, பூந்தோட்டம் அமைந்துள்ள தடுப்பு சுவா் மீது விழுந்தது.

பின்னா் நானும் சில போலீஸாரும் சோ்ந்து ரெளடி கருக்கா வினோத்தை மடக்கிப் பிடிக்க முயன்றபோது, ‘ என்னை பிடிக்க வந்தீா்கள் என்றால், உங்கள் மீதும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசிவிடுவேன்’ என்று மிரட்டினாா் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com