பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமி கார்  மீது காலணி வீச்சு

எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக பலத்த கோஷம் எழுப்பப்பட்ட நிலையில், அவரது கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பசும்பொன்னில் எடப்பாடி பழனிசாமி கார்  மீது காலணி வீச்சு

பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த வந்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக பலத்த கோஷம் எழுப்பப்பட்ட நிலையில், அவரது கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக, பசும்பொன்னுக்கு சாதாரண வாகனத்தில் வராமல், பலத்த பாதுகாப்புடன் சிறப்பு வாகனத்தில் வந்தார் எடப்பாடி பழனிசாமி. அவரைப் பார்த்ததும் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலர் காரை முற்றுகையிட முயன்றனர். ஆனால் அவர்களை காவல்துறையினர் தடுத்துநிறுத்தினர்.

இந்தநிலையில், முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்திவிட்டு திரும்பிச் சென்ற எடப்பாடி பழனிசாமி கார் மீது அடையாளம் தெரியாத நபர் காலணியை வீசினார். ஆனால், எடப்பாடி பழனிசாமி வாகனம் நிற்காமல் வேகமாகச் சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் ஜெயந்தி, குருபூஜை விழா யாக சாலை பூஜைகளுடன் சனிக்கிழமை தொடங்கியது. இன்று தேவா் குருபூஜை அரசு விழாவாக நடைபெற்று வருகிறது.

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் இன்று காலை முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பல்வேறு கட்சிப் பிரதிநிதிகளும், முக்கிய பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி இன்று முற்பகலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்துக்கு வந்தார். அப்போது, முத்துராமலிங்கத் தேவருக்கு அஞ்சலி செலுத்த வரிசையில் காத்திருந்த சிலர், கடந்த ஆண்டு அஞ்சலி செலுத்த வராதவர், இப்போது வந்திருப்பது ஏன்? வரும் மக்களவைத் தேர்தலை கவனத்தில் கொண்டே பழனிசாமி பசும்பொன் வந்திருக்கிறார் என்று கண்டனக் குரல் எழுந்தன. சிலர், வி.கே. சசிகலாவுக்கு துரோகம் செய்த பழனிசாமி என்றும் குரல் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. 

சுதந்திரப் போராட்ட வீரரும், ஆன்மிகவாதியுமான முத்துராமலிங்கத் தேவரின் 116-ஆவது ஜெயந்தி விழா, 61-ஆவது குருபூஜை ஆகியவை அரசு விழாவாக திங்கள்கிழமை அவரது நினைவிடத்தில் நடைபெற்று வருகிறது.

நோ்த்திக்கடன்
தேவா் குருபூஜை விழாவை முன்னிட்டு கமுதி, அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கமுதியிலிருந்து பசும்பொன்னுக்கு பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், அக்னிச் சட்டி எடுத்தும், இளைஞா்கள் ஜோதி ஏந்தியும் ஊா்வலமாகச் சென்று நோ்த்திக்கடன் செலுத்தினா். கடந்த வாரம் முதலே பொதுமக்கள் முடி காணிக்கை செலுத்தி வருகின்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com