தமிழகத்தில் விரைவில் புதிய பீர் வகைகள்!!

தமிழகத்தில் வரும் கோடைக்காலத்தில் பீர் பிரியர்களுக்காக, புதிய வகை பீர்கள் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன.
பீர்
பீர்

தமிழகத்தில் வரும் கோடைக்காலம் முதல், பீர் பிரியர்களுக்காக, பல புதிய வகை பீர்கள் டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கு வரவிருக்கிறது.

மற்ற மாநிலங்களில் ஏற்கனவே பல பீர் வகைகள் விற்பனையில் இருக்கும் நிலையில், மற்ற மாநிலங்களோடு போட்டி போடும் வகையில், பீரா, கெய்ஸ்ட், காட்ஃபாதர் மற்றும் தண்டர்பெல்ட் ஆகிய பீர் வகைகளை தமிழகம் முழுவதும் உள்ள மதுபானக் கடைகளில் விற்பனைக்குக் கொண்டு வர டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மேலும், குறைந்த ஆல்கஹால் கொண்ட பிரெஷ் பீர் வகைகளையும் அறிமுகப்படுத்தவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அண்டை மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் மிகக் குறைவான பீர் வகைகளே விற்பனையில் இருப்பதாகத் தொடர்ந்து மதுப்பிரியர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில், அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக, புதிய பீர் வகைகள் அறிமுகமாகவிருக்கின்றன.

எனவே, முதற்கட்டமாக, டாஸ்மாக் நிறுவனம், அண்டை மாநிலங்களிலிருந்து ஒரு கோப்பை அளவு கொண்ட பீர் முதல், பாட்டில் என பல வகை பீர்களை வாங்கி விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

தற்போதைக்கு, டாஸ்மாக் கடைகளில், மாநிலத்தில் இருக்கும் மதுபான ஆலைகளில் தயாரிக்கும் மதுபானங்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இறக்குமதி மதுபானங்கள் வேண்டுமெனில் எலைட் போன்ற மதுபானக் கடைகளில் மட்டுமே வாங்க முடியும்.

தமிழகத்தில் உள்ள ஐந்து மதுபான ஆலைகளிலிருந்து டாஸ்மாக் கடைகளுக்கு 35 வகையான மதுபானங்கள் விற்பனைக்கு வருகின்றன. 

மத்தியப் பிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் மதுபான ஆலை ஒன்று, கும்மிடிப்பூண்டியில் புதிதாக ஆலையைத் திறந்து, அதன் மூலம் ஹண்டர், வூட்பெக்கர், பவர்கூல் போன்ற புதிய வகையான பீர்களை தமிழகத்தில் விற்பனை செய்யவிருக்கிறது. இவை வரும் நவம்பர் மாதத்திலிருந்தே விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளிமாநிலங்களிலிருந்து வாங்கப்படும் புதிய பீர் வகைகள், டாஸ்மாக் கடைகளில் உள்ள அலமாரிகளை வந்தடைய டிசம்பர் மாதம் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது.

இதில் மிக முக்கிய தகவல் என்னவென்றால், புதிதாக அறிமுகமாகும் அனைத்து மதுபான வகைகளும் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்பனைக்குக் கொண்டு வரப்படும் என்றும் இதுவரை இருக்கும் எலைட் கடைகளுக்கு என்று மட்டும் கட்டுப்படுத்தப்படாது எனவும் உறுதிப்படுத்தியுள்ளது. எங்களது நோக்கம் ஒன்றுதான், தமிழகத்திலும் அண்டை மாநிலங்களில் கிடைக்கும் அனைத்து வகை பீர்களும் கிடைக்க வேண்டும் என்பதே என்று டாஸ்மாக் தரப்பில் கூறப்பட்டுள்ளது.  அண்மையில் கூட, டாஸ்மாக் நிறுவனம் 100 சதவீதம் பார்லியை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட மால்ட் என்ற பீர் வகை அறிமுகம் செய்யப்பட்டது.

ஆல்கஹால் குறைந்த மதுபானங்களில் முதலிடத்தில் இருக்கும் பூர் வகையில், மிகவும் குறைந்த ஆல்கஹால் கொண்ட புதிய பிரெஷ் பீர் வகைகளை டாஸ்மாக் அறிமுகப்படுத்தவிருக்கிறதாம். பிரெஷ் பீர் தயாரிப்பு நிறுவனங்களிடம் டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இது சுமூகமாக முடிந்தால், வரும் கோடைக்காலத்தில் இருந்தே தமிழகத்தில் பிரெஷ் பீர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரெஷ் பீர் தயாரிப்பு நிறுவனங்களே, அதற்கென பிரத்யேக குளிர்பதனப் பெட்டிகளையும் வழங்குவார்கள் என்றும், வழக்கமான பீர்களைப் போல இவை வெப்பத்தினால் பதப்படுத்தப்பட்டிருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வழக்கமான பீர்களை 180 நாள்கள் வைத்திருக்கலாம் என்றால், இதன் காலம் வெறும் 90 நாள்கள்தான்.

இந்த பிரெஷ் பீர்களில் 4 சதவீதம் ஆல்கஹால் இருக்கும். வழக்கமான பீர் வகைகளில் 8 சதவீதம் ஆல்கஹால் இருக்கும். லெகர் பீர் வகைகளில் 7 சதவீதம் ஆல்கஹால் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com