மோடிக்கு எதிராக திமுக நேரடியாக போட்டியிட்டால் ஆதரிப்போம்: சீமான் பேட்டி

பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக திமுக நேரடியாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளரை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை
மோடிக்கு எதிராக திமுக நேரடியாக போட்டியிட்டால் ஆதரிப்போம்: சீமான் பேட்டி


கோவை: பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக திமுக நேரடியாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளரை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். 

கோவையில் கோவை மண்டலத்திற்கான கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். 

பின்னர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அப்போது, தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது தான் நாம் தமிழர் கொள்கை எனவும், மக்கள் எதிர்பார்ப்புக்காக தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து நிற்கும். 

அண்ணாமலை தனித்து நின்று வெற்றி பெறட்டும் ஏன் கூட்டணி வைத்துள்ளார் என்று கேள்வி எழுப்பிய சீமான், அண்ணாமலை தான் வெறுப்பு அரசியல் நடத்தி வருகிறார்.

வயிறு காய்ந்து இருக்கும் போது வானில் சந்திராயன் எதற்கு என கேள்வி எழுப்பியவர், இந்தியாவில் 80 கோடி ஏழை மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பசியாற்ற வேண்டும் எனக் கூறினார்.

எனக்கும் விஜயலட்சுமிக்கும் திருமண ஆகியிருந்தால் புகைப்படத்தை வெளியிடச் சொல்லுங்கள் என கூறிய சீமான்,  விஜயலட்சுமி என்ன அன்னை தெரசாவா?  ஐரோம் சர்மிளாவா? அன்னி பெசண்ட் அம்மையாரா? என்னைப் பற்றி பேசுவதற்கு அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? என ஆவேசமாக பேசிய சீமான், பல லட்சம் பேர் என்னோடு புகைப்படம் எடுத்து இருக்கிறார்கள்.

இதேபோன்று 2013 ஆம் ஆண்டு புகார் அளித்த விஜயலட்சுமி அப்புறம் எங்கே போனார். அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போதும், தற்போது 2024-ஆம் ஆண்டு தேர்தல் வர 6 மாதங்களுக்கு முன்பு பிரச்னை ஏற்படுத்துகிறார்.

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தராத காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆதரவு அளிக்கிறது. முதலில் தமிழ்நாட்டு மக்களுக்கு காவிரியில் தண்ணீர் வாங்கி தாருங்கள்.

பிற நாடுகளுக்கு ரபேல் விமானத்தை விற்பனை செய்து வரும் பிரான்சிடம் இருந்து ரபேல் விமானத்தை வாங்குவது ஏன்?. இதில் இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு எங்கே இருக்கிறது. 

திமுக, அதிமுகவுடன் எங்களுக்கு நடப்பது பங்காளி சண்டை, அன்ணன் தம்பி சண்டை. ஆனால் இதில் பாஜக எதற்கு தலையீடுகிறது. நாட்டை ஏற்கனவே பிச்சைகாரர் நாடாக ஆக்கிவிட்டீர்கள். இனி தமிழ்நாட்டையும் அப்படி மாற்றப் போகிறீர்களா? உங்களுக்கு இங்கு என்ன வேலை இருக்கிறது?

தமிழ் தேசியத்தை வளர்க்க வேண்டும் என்பது தான் என்னோடு கொள்கை. சாதி, மத உணர்வு சாகும் போது தமிழ் இனம் தானாக வளரும் எனவும், மொழி பற்று இனப்பற்று வரும் போது சாதி பற்று மறைந்துவிடும். தமிழ்நாட்டில் எத்தனை தெருவில் தமிழில் பெயர் உள்ளது என சீமான் கேள்வி எழுப்பினார்.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக திமுக போட்டியிடவில்லை. 2019 தேர்தலில் பாஜக போட்டியிட்ட தொகுதிகளை எல்லாம் கூட்டணி கட்சிகளுக்குதான் பெரும்பாலான தொகுதிகளை ஒதுக்கியது திமுக. தூத்துக்குடியில் மட்டுமே எதிர்த்து போட்டியிட்டது. அது விதிவிலக்காக அமைந்தது. 

2024 மக்களவைத் தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடப் போவதாக கூறுகின்றனர். 

ராமநாதபுரத்தில் மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன். அப்படி மோடி போட்டியிட்டால் திமுக நேரடியாக உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளரை நிறுத்தினால் நாம் தமிழர் கட்சி போட்டியிடாது. மோடியை எதிர்த்து போட்டியிடும் திமுக வேட்பாளரை நாம் தமிழர் கட்சி ஆதரிக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. 

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சாலை, ஒரே கல்வி கொள்கையை நான் ஆதரிக்கிறேன். ஆனால் காவிரியில் இருந்து முதலில் பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொண்டு வந்தால் கும்பிடுவேன்.

தேசிய இனத்தின் உரிமைக்காக, தெளிவான புரிதலோடு நிற்கிறவன் சீமான் என தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com