பூஜ்ஜிய சதவீதம் என்பது பூஜ்ஜிய மதிப்பெண் அல்ல: ஸ்டாலின் விமர்சனத்துக்கு தமிழிசை கருத்து

நீட் தேர்வை புரிந்துகொள்ள முடியாதவர்களால் சதவீத முறையைப் புரிந்து கொள்ள முடியாது என்று ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.
பூஜ்ஜிய சதவீதம் என்பது பூஜ்ஜிய மதிப்பெண் அல்ல: ஸ்டாலின் விமர்சனத்துக்கு தமிழிசை கருத்து


சென்னை: நீட் என்றால் பூஜ்ஜியம் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்த விமர்சனத்துக்கு, நீட் தேர்வை புரிந்துகொள்ள முடியாதவர்களால் சதவீத முறையைப் புரிந்து கொள்ள முடியாது என்று ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார்.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க நீட் தோ்வில் பங்கேற்றிருந்தால் போதுமானது என்றும், தகுதி மதிப்பெண் எதுவும் தேவையில்லை என்றும் மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்திருந்தது.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க நீட் மதிப்பெண் தேவையில்லை என்ற உத்தரவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்து, நீட் என்றால் பூஜ்ஜியம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், நீட் தேர்வை புரிந்துகொள்ள முடியாதவர்களால் சதவீத முறையைப் புரிந்து கொள்ள முடியாது. ஒரு தனிநபரைக் காட்டிலும் எத்தனை பேர் குறைவாகச் செயல்பட்டார்கள் என்பதை சதவீத அமைப்பு கணக்கிடுகிறது. பூஜ்ஜிய சதவீதம் என்பது பூஜ்ஜிய மதிப்பெண்கள் அல்ல. நீட் தேர்வை பூஜ்ஜியம் என்று கூறுவது, எம்பிபிஎஸ் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளை அவமதிக்கும் செயல் என்று தமிழிசை பதிவிட்டுள்ளார்.

முதுநிலை நீட் தேர்வு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட ட்விட்டர்(எக்ஸ்) செய்தியில்,

“நீட் தேர்வின் பலன் என்ன என்றால் பூஜ்ஜியம் தான் என்பதை மத்திய பா.ஜ.க. அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தகுதி மதிப்பெண்  பூஜ்ஜியம் தான் என்று வரையறுப்பதன் மூலமாக தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்பதில் உள்ள தகுதிக்குப் பொருள் கிடையாது என்பதை அவர்களே ஒப்புக் கொண்டு விட்டார்கள். கோச்சிங் செண்டர்களில் சேருங்கள், நீட் தேர்வுக்கு பணம் கட்டுங்கள், போதும் என்றாகி விட்டது.

நீட் என்றால் பூஜ்ஜியம் என்றாகி விட்டது. இதைத்தான் நாங்கள் இத்தனை ஆண்டுகளாகச் சொல்லி வந்தோம். எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இரக்கமே இல்லாமல் இருந்துவிட்டு இப்போது இப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்கள்.

நீட் என்ற பலிபீடத்தைக் கொண்டு உயிர்களைப் பறிப்பதற்காகவே இந்த பா.ஜ.க. ஆட்சியை அகற்றியாக வேண்டும்.” என்று பதிவிட்டிருந்தார்.

முன்னதாக, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க நீட் தோ்வில் பங்கேற்றிருந்தால் போதுமானது என்றும், தகுதி மதிப்பெண் எதுவும் தேவையில்லை என்றும் மத்திய மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்திருந்தது.

நாடு முழுவதும் அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகள், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ மற்றும் பல் மருத்துவப் பட்டமேற்படிப்பான எம்டிஎஸ் படிப்புகளுக்கான இடங்கள் முதுநிலை நீட் தோ்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது.

இந்த நீட் தோ்வை தேசிய மருத்துவ அறிவியல் தோ்வுகள் வாரியம் (என்பிஇஎம்எஸ்) நடத்துகிறது. நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.

இந்த இடங்களுக்கும், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களின் இடங்களுக்கும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களின் இடங்களுக்குமான கலந்தாய்வை மத்திய மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) இணையவழியில் நடத்தி வருகிறது.

எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ மற்றும் எம்டிஎஸ் படிப்புகளுக்கான 2023-24-ஆம் கல்வி ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு இணையதளத்தில் கடந்த ஜூலை 27-ஆம் தேதி தொடங்கியது.

மூன்று சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. மூன்றாம் சுற்று முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அதிக இடங்கள் காலியாகவுள்ளதால், நீட் தோ்வு எழுதிய அனைவரையும் பங்கேற்கச் செய்து, அந்த இடங்களை நிரப்புவதற்காக நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக மருத்துவக் கலந்தாய்வு குழு அறிவித்துள்ளது.

எனவே, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள முதுநிலை மருத்துவக் கலந்தாய்வில் புதிய விதிகளின்படி, நீட் தோ்வு எழுதிய அனைவரும் இணையவழியில் பதிவு செய்து பங்கேற்கலாம் என்றும், ஏற்கெனவே பதிவு செய்தவா்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை அகில இந்திய ஒதுக்கீட்டுக்குப் போக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50 சதவீத இடங்கள், தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது.

மாநில இடங்களுக்கான கலந்தாய்வு: இணையதளங்களில் கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி தொடங்கியது. இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ள நிலையில், காலியாகவுள்ள இடங்களை நிரப்புவதற்கான மூன்றாம் சுற்று கலந்தாய்வு புதிய அறிவிப்பின்படி தகுதி மதிப்பெண் எதுவுமின்றி நடைபெறவுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com