விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வந்தே பாரத் ரயிலில் பயணி பலியானது எப்படி:  விடியோவால் அதிர்ச்சி

விபத்து எப்படி நடந்தது என்பதற்கான விடியோ வெளியானதைத் தொடர்ந்து 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :29 செப்டம்பர் 2023, 8:21 am

DIN

சேலம் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணி பலியான சம்பவத்தில், விபத்து எப்படி நடந்தது என்பதற்கான விடியோ வெளியானதைத் தொடர்ந்து 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விபத்துக்குக் காரணமாக இருந்ததாகக் கூறி, 2 ஊழியர்களை, பணியிடை நீக்கம் செய்து கோட்ட மேலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

சென்னை, கீழ்கட்டளை, திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் ஏ.எஸ்.பால் (70). இவா் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவா். இவருடைய மனைவி ரோஸ் மாா்கிரேட்.

ஈரோட்டில் உள்ள தனது சகோதரியைப் பாா்ப்பதற்காக மனைவியுடன் வந்தே பாரத் விரைவு ரயிலில் செவ்வாய்க்கிழமை சென்னையில் இருந்து ஈரோட்டுக்கு பால் சென்று கொண்டிருந்தாா். ரயிலில் கடும்குளிராக இருந்ததால், பால் தனது இருக்கையில் இருந்து எழுந்து ரயிலின் வாசல் பகுதிக்கு வந்து நின்றுள்ளாா். ரயில் சேலம் ரயில் நிலையம் நோக்கி வந்த நிலையில், அவசரக் கதவுக்கு அருகே கை வைத்திருக்கிறார். அப்போது அது திறந்துகொண்டதில் நிலைகுலைந்த அவா், சேலம் ரயில் நிலையத்தின் நடைமேடை இல்லாத தண்டவாளப் பகுதியில் கீழே விழுந்தாா். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தகவலின் பேரில் விரைந்து வந்த ரயில்வே போலீஸாா் அவரை மீட்டனா். தொடா்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதுகுறித்து சேலம் ரயில் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த விபத்தில் அவசர கதவின் பட்டனை யாரும் அழுத்தி திறக்காத நிலையில், அது எப்படி திறந்து பவுலேஷ் கீழே விழுந்தார் என ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா, நேரடியாக சேலம் ரயில்வே ஸ்டேஷ னுக்கு வந்து விசாரித்தார். பின்னர் அவர், நேரடியாக கோவைக்கு புறப்பட்டுச் சென்று, விபத்து நிகழ்ந்த வந்தே பாரத் ரயிலின் சி3 பெட்டியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார்.

அதில், சேலம் ரயில்வே ஸ்டேஷன் 4வது பிளாட் பாரத்தில் வந்தே பாரத் ரயில் வந்து நிற்கவும், 5வது பிளாட்பார்ம் பகுதியில் இருந்த 2 ரயில்வே ஊழியர்கள் தண்டவாள பாதை வழியே இறங்கி வந்து வந்தே பாரத் ரயிலின் அவசர  கதவின் பட்டனை அழுத்தி திறந்து, ரயிலில் ஏறி மறு முனையில் 4வது பிளாட் பார்ம்மில் இறங்கிச் சென்றது தெரியவந்தது.

அந்த இருவரும் சென்ற சிறிது நேரத்தில், அவசர கதவு பகுதிக்கு பவுலேஷ் சென்று கதவின் மீது கை வைக்கவும் அது திறந்து கீழே விழுந்து உயிரிழந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து வந்தே பாரத் ரயிலின் அவசர கதவை திறந்து வைத்த ரயில்வே ஊழியர்கள் குறித்து கோட்ட மேலாளர் விசாரணை நடத்தினார். .

அதில் அவர்கள், சேலம் ரயில்வே ஸ்டேஷனில் பாயிண்ட்மேன்களாக பணியாற்றி வரும் தாமரைச்செல்வன், ஒய்.எஸ். மீனா எனத்தெரியவந்தது. அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்து கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்ஹா நேற்று உத்தரவிட்டார்..

 தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் தற்போது கோட்ட இயக்கப்பிரிவு அதிகாரிகள், துறைரீதியான விசாரணை நடத்தி வருகின்றனர்.

வந்தே பாரத் ரயிலின் அவசர கதவை இரண்டு ஊழியர்கள் திறந்து வைத்ததால்தான், பயணி தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என தெரிய வந்திருக்கும் இச்சம்பவம் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.