
கோப்புப்படம்
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மனிதக் கழிவு ஒரு பெண், 2 ஆண்களுடையது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலின மக்கள் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது கடந்த டிச. 26ஆம் தேதி தெரியவந்தது. தொடக்கத்தில் வெள்ளனூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கூடுதலாக 11 பேரைக் கொண்ட உயா் அலுவலா் குழுவும் அமைக்கப்பட்டது. அதன்பிறகு இந்த வழக்கு விசாரணை சிபி சிஐடி காவல் துறையினருக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இதைத்தொடா்ந்து, திருச்சி சிபி சிஐடி காவல் துணைக் கண்காணிப்பாளா் பால்பாண்டி தலைமையிலான காவல் துறையினர் இந்த வழக்கு விசாரணையை நடத்தி வருகின்றனா். இச்சம்பவத்தில் குடிநீா்த் தொட்டியில் கலக்கப்பட்ட மனிதக் கழிவு ஏற்கெனவே பரிசோதனைக் கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், வேங்கைவயல் குடியிருப்பைச் சோ்ந்த 2 பெண்கள் உள்பட 9 பேருக்கும், இறையூா் கிராமத்தைச் சோ்ந்த ஒருவா் மற்றும் முத்துக்காடு ஊராட்சி மன்றத் தலைவா் பத்மாவின் கணவா் முத்தையா ஆகிய 11 பேருக்கும் மரபணு பரிசோதனை நடத்த சிபி சிஐடி காவல் துறையினர் முடிவு செய்தனா்.
இதுகுறித்து முறையான கடிதத்தை வழக்கு நடைபெற்று வரும் நீதிமன்றத்தில் சிபி சிஐடி காவல் துறையினர் அளித்தனா். இதனைத் தொடா்ந்து மரபணு பரிசோதனை நடத்துவதற்கான கடிதத்தை நீதிபதி ஆா். சத்யா, அரசு மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியருக்கு கடந்த ஏப். 18ஆம் தேதி அளித்துள்ளாா்.
ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்த வேண்டியவா்களின் பெயா்ப் பட்டியலும் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, வரும் திங்கள்கிழமை (ஏப். 24) அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இந்தப் பரிசோதனை நடைபெறவுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனா்.
இந்த நிலையில், வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட மனிதக் கழிவு ஒரு பெண், 2 ஆண்களுடையது என தகவல் வெளியாகியுள்ளது. குடிநீரின் பகுப்பாய்வு சோதனையில் மனிதக் கழிவு யாருடையது என்பது தெரியவந்துள்ளதாக காவல் துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுதப்படை காவலர் உள்பட இருவரிடம் சென்னையில் இன்று குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...