
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியை வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் விடுவித்தது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.
தமிழகத்தில் கடந்த 1996 முதல் 2001-ஆம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவா் க.பொன்முடி. தனது பதவிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 3 கோடியே 8 லட்சத்து 35 ஆயிரத்து 66 மதிப்பிலான சொத்துகளை சோ்த்ததாக க.பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோா் மீது விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையால் கடந்த 2002-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் 100-க்கும் மேற்பட்டோா் சாட்சிகளாகச் சோ்க்கப்பட்டிருந்தனா். இதனிடையே, கடந்த 2021-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததையடுத்து இந்த வழக்கு வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, 7.11.2022 முதல் விசாரணை நடைபெற்று வந்தது.
இதையும் படிக்க | திருவாரூரில் கன மழை: பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு
அனைத்து சாட்சிகளிடமும் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இந்த வழக்கில் ஜூன் 28 ஆம் தேதி புதன்கிழமை தீா்ப்பு அளிக்கப்பட்டது. இதையொட்டி, அமைச்சா் க.பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகிய இருவரும் வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினா்.
அப்போது, போதிய ஆதாரங்கள் இல்லாததையடுத்து க.பொன்முடி, விசாலாட்சி ஆகிய இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்து, நீதிபதி வசந்தலீலா உத்தரவிட்டாா்.
இந்தநிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து, உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை வேலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் விடுவித்து குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது.
எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து வருகிறார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்துள்ள நிலையில், இந்த வழக்கு இன்று வியாழக்கிழமை விசாரணை நடைபெறுகிறது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...