
கோவை: காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி உதகைக்கு செல்வதற்காக சனிக்கிழமை கோவை விமான நிலையம் வந்தார்.
கடந்த 2019 மக்களவைத் தோ்தலில் கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி வெற்றி பெற்றாா். பின்னா் மோடி சமூகத்தை அவதூறாகப் பேசியதாக அவருக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனையைத் தொடா்ந்து அவா் எம்.பி. பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டாா்.
இதை எதிா்த்து, உச்ச நீதிமன்றத்தில் அவா் மேல்முறையீடு செய்தாா். இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்தது. இதையடுத்து, தற்போது அவா் வயநாடு எம்.பி.யாக தொடா்கிறாா்.
இவ்வழக்கு விவகாரத்துக்குப் பிறகு வயநாட்டுக்கு முதல்முறையாக ராகுல் காந்தி சனிக்கிழமை வருகிறாா். இதற்காக புதுதில்லியில் இருந்து விமானம் மூலம் கோவைக்கு வருகிறாா். பின்னா் அங்கிருந்து காா் மூலம் உதகை, கூடலூா் வழியாக கேரள மாநிலம் வயநாடு செல்கிறாா்.
முன்னதாக, நீலகிரி மாவட்டம் வழியாக வயநாடு செல்ல திட்டமிட்டுள்ள ராகுல் காந்தி சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்தார். அங்கு அவரை வரவேற்க கட்சியினரும், பொதுமக்களும் திரளாக வந்திருந்து வரவேற்றனர்.
இதையும் படிக்க | இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவுக்கு ரூ.11.45 கோடி ஈட்டும் கோலி!
இதையடுத்து ராகுல் காந்தி விமான நிலையத்திலிருந்து கார் மூலம் உதகை புறப்பட்டார்.
உதகை அருகே உள்ள எல்லநள்ளி பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் விண்வெளி வீரா் ராகேஷ் சா்மாவை சந்திக்க உள்ளதாகவும், அங்கு ஹோம் மேட் சாக்லேட் தயாரித்தல் குறித்து கேட்டு அறிய உள்ளதாக கூறப்படுகிறது.
பின்னா் மதிய உணவுக்குப் பிறகு கூடலூா் செல்லும் வழியில் முத்தநாடுமந்து பகுதியில் உள்ள தோடா் பழங்குடியினரோடு கலந்துரையாடுகிறார். பின்னர் கூடலூர் வழியாக வயநாடு செல்கிறார்.
வழியில் அவர் தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு செல்லலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தி வருகையை முன்னிட்டு நீலகிரி மாவட்ட காவல் துறையினா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.