ரயில் பெட்டியை பூட்டிவிட்டு சமையல் செய்ததால்... மதுரை ரயில் விபத்து பற்றிய அதிர்ச்சித் தகவல்

ரயில் பெட்டிக்குள்ளேயே மண்ணெண்ணெய் அடுப்பு வைத்து சமையல் செய்தபோது, தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை ரயில் விபத்து பற்றிய அதிர்ச்சித் தகவல்
மதுரை ரயில் விபத்து பற்றிய அதிர்ச்சித் தகவல்
Published on
Updated on
2 min read

கொல்லம் - புனலூர் விரைவு ரயிலில் வந்த சுற்றுலாப் பயணிகள், ரயில் பெட்டியை, உள்ளுக்குள் பூட்டிவிட்டு, பெட்டிக்குள்ளேயே மண்ணெண்ணெய் அடுப்பு வைத்து சமையல் செய்தபோது, தீ விபத்து நேரிட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொல்லம் - புனலூர் விரைவு ரயிலில் வந்த சுற்றுலாப் பயணிகள், தங்களுடன் சமையல் செய்யும் 3 பேரையும் உடன் அழைத்து வந்திருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ரயில் பெட்டிக்குள் சிலிண்டர், அடுப்பு, மண்ணெண்ணெய் அடுப்பு, விறகு உள்ளிட்டவை இருந்ததும், சுற்றுலா பயணிகளுக்கு சமையல் செய்து கொடுக்க தனியாக மூன்று சமையல்காரர்களும் உடன் அழைத்து வந்திருந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இன்று காலை சுற்றுலா ரயில், மதுரை ரயில் நிலையத்தை வந்தடைந்ததும், அவர்கள் ரயில் பெட்டியின் கதவுகளை பூட்டிவிட்டு ரயிலுக்குள்ளேயே சமையல் செய்தது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.

சமையல் செய்தபோது, சிலிண்டர் வெடித்து தீப்பிடித்துள்ளது. இந்த நிலையில், ரயிலின் பெட்டிகளை அவர்கள் பூட்டியிருந்ததால் உடனடியாக வெளியே தப்பியோடவும் முடியாமல், 9 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகியுள்ளனர்.

விபத்து குறித்து ஆய்வு செய்ய சென்னையிலிருந்து தொழில்நுட்பக் குழுவினர் மதுரை விரைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 5.30 மணி அளவில் இந்தக் கோர விபத்து நிகழ்ந்துள்ளது. மதுரை ரயில் நிலையம் அருகே, கொல்லம் - புனலூர் விரைவு ரயிலில் இருந்து கழட்டி டிராக்கில் விடப்பட்டிருந்த ஐஆர்சிடிசி சுற்றுலா ரயிலின் 3 பெட்டிகளில் ஒரு பெட்டியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 17 ந் தேதி லக்னௌவில் இருந்து ஐஆர்சிடிசி ஆன்மிக  சுற்றுலா ரயிலில் புறப்பட்ட, 180 பயணிகள் பல்வேறு ஆன்மிகத் தலங்களுக்கு சென்று விட்டு, கடைசியாக திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவில் தரிசனத்தை முடித்து விட்டு, மதுரைக்கு அதிகாலை 5.15 மணி அளவில் வந்தடைந்தனர்.

பெட்டியில் இருந்து 40 க்கும் மேற்பட்ட பயணிகள் கீழே நடைபாதையில் இறங்கி அமர்ந்து இருந்தனர்.

பயணி ஒருவர், ரயிலுக்குள் மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்து டீ தயாரித்தபோது, தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. தீயைக் கண்டதும், வெளியில் இருந்த பயணிகள் சத்தமிட, அவசர கதியில் தீயை அணைக்க முயற்சிக்காமல் கீழே இறங்க, அந்தப் பெட்டி முழுவதும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது.

இதில் கோச்சில் தூங்கிக் கொண்டு இருந்த வயதானவர்கள் கீழே இறங்க இயலாமல் பலியாகி உள்ளனர்.

சம்பவம் குறித்து அறிந்ததும், விரைந்து வந்த மதுரை நகர தீயணைப்புத் துறையினரும், அக்கம்பக்கத்து பொது மக்களும் தீயை அணைத்து, எரிந்த நிலையில் 9 சடலங்களை மீட்டு உள்ளனர். அதில் 5 ஆண்கள், 3 பெண்கள், அடையாளம் தெரியாத சடலம் 1 மீட்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு ரயில்வே காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறையினர், காவல்துறை ஆணையர்,  விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அமைச்சர் பி. மூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து விபரங்களைக் கேட்டு அறிந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com