சேலத்தில் வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டில் கலந்துகொள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
கடந்த 2007ல் நெல்லையில் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாடு சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் டிச. 17-ஆம் தேதி நடைபெற உள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த மாநாட்டிற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 10 லட்சம் பேர் இதில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாடு குறித்த விழிப்புணா்வை இளைஞா்களிடையே ஏற்படுத்த இருசக்கர வாகனப் பேரணியை கன்னியாகுமரியில் இருந்து கடந்த 15-ஆம் தேதியன்று இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
இதையடுத்து திமுக இளைஞரணி மாநாட்டில் கலந்துகொள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக மாநாடு நடைபெறுவதாலும் அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதாலும் திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மாநாட்டுக்கான அழைப்பிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகனிடம் வழங்கி திமுக இளைஞரணியினர் வாழ்த்து பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.