தூத்துக்குடியில் அதிகரிக்கும் ஜாதியப் பதற்றம்! ஊரை காலி செய்யும் தலித் குடும்பங்கள்!

தூத்துக்குடியில் சமீபத்தில் நடந்த ஜாதியக் கொலையைத் தொடர்ந்து பட்டியலினத்தை சேர்ந்த மக்கள் பலர் ஊரைக் காலிசெய்துவிட்டு பக்கத்து ஊர்களுக்கு இடம்பெயர்கின்றனர்.
தூத்துக்குடியில் அதிகரிக்கும் ஜாதியப் பதற்றம்! ஊரை காலி செய்யும் தலித் குடும்பங்கள்!
Published on
Updated on
1 min read

தூத்துக்குடியில் சமீபத்தில் நடந்த ஜாதியக் கொலையைத் தொடர்ந்து பட்டியலினத்தை சேர்ந்த மக்கள் பலர் ஊரைக் காலிசெய்துவிட்டு பக்கத்து ஊர்களுக்கு இடம்பெயர்கின்றனர்.

கடந்த நவம்பர் 13-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரை கிராமத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த விவசாயி மணி மரத்தடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது சில நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

அதையடுத்து கொலையாளிகளை கைது செய்து விசாரித்தபோது, “கொலையான மணிக்கும், எங்களுக்கும் எந்த விரோதமும் கிடையாது. 2015-ல் நடந்த எங்கள் சமூகத்தைச் சேர்ந்தவரின் கொலைக்கு பழிவாங்குவதற்காக பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இவரை வெட்டிக் கொலை செய்தோம்.” என்று கூறி அதிர்ச்சி அளித்தனர்.

எந்த முன்விரோதமும் இல்லாமல் ஜாதிவன்மத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.

இந்தக் கொலை சம்பவத்தையடுத்து, மணக்கரையில் ஆதிக்கம் செலுத்திவரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுடன் வாழ்வதை பாதுகாப்பற்றதாக உணரத் தொடங்கிய பட்டியலின குடும்பங்கள் அவ்வூரை காலிசெய்துவிட்டு, பக்கத்து ஊர்களில் தஞ்சம் புகத் தொடங்கியுள்ளனர்.

மணக்கரையில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலந்தா கிராமத்தில் வசிப்பதற்கு இடம் கோரி வருகின்றனர். 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம் கேட்டு ஆலந்தா கிராமத் தலைவர்களை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் அதிகாரிகள் தலைமையில் அப்பகுதியில் நடந்த அமைதி கூட்டத்திலும் பட்டியலின மக்கள் தங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி வேறு பகுதியில் குடியமர்த்துமாறு கோரிக்கை விடுத்தனர்.

கொலையான மணியின் மகன் சிவபெருமாள் அளித்துள்ள புகாரில், “எனது தந்தையைக் கொன்றவர்கள் பட்டியலின மக்களை தங்கள் இருப்பிடங்களை காலி செய்யுமாறும் கூறியுள்ளார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அப்பகுதியில் தேநீர் கடைகளிலும், குளங்களிலும் கூட ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜாதிய அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட கொலையைத் தொடர்ந்து அப்பகுதியில் ஜாதி மோதலுக்கான பதற்றம் அதிகரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com