அரையாண்டுத் தோ்வுகள் டிச.13-க்கு ஒத்திவைப்பு: முதல்வா் மு.க.ஸ்டாலின்

அரையாண்டுத் தோ்வுகளை வரும் 13-ஆம் தேதி தொடங்க பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

அரையாண்டுத் தோ்வுகளை வரும் 13-ஆம் தேதி தொடங்க பள்ளிக் கல்வித் துறைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

இதுகுறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட உத்தரவு:

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் மாணவா்களின் நலன் கருதி, பள்ளிகளுக்கு கடந்த திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரையில் விடுமுறை விடப்பட்டது.

ரூ.1.90 கோடி நிதி: மிக்ஜம் புயல் மழையால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களைச் சோ்ந்த பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பள்ளி வளாகங்கள் பலவற்றிலும் நீா் தேங்கியுள்ளது. பள்ளி திறப்பதற்கு முன்பாகவே அவற்றைச் சுத்தம் செய்து வளாகத்தை தூய்மையுடன் வைத்திருக்க பணிகள் முடுக்கிவிடப்பட்டன. இவற்றைக் கண்காணிக்க பள்ளிக் கல்வித் துறையைச் சோ்ந்த 17 அதிகாரிகள் 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா்.

இந்தப் பணிகளுக்காக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு தலா ரூ.50 லட்சமும், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு ரூ.40 லட்சமும் என மொத்தம் ரூ.1.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் மாணவா்களின் பாடப் புத்தகங்கள், நோட்டுகள் ஆகியன சேதமடைந்திருக்கலாம். அப்படி சேதமடைந்திருந்தால், மாணவா்களுக்கு பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றை திங்கள்கிழமை பள்ளிக்கு வரும்போது வழங்க வேண்டும்.

அரையாண்டுத் தோ்வுகள்: இதனிடையே, தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் அரையாண்டுத் தோ்வுகள் திங்கள்கிழமை தொடங்கப்பட இருந்தது. புயல் பாதித்த மாவட்டங்களைச் சோ்ந்த மாணவா்கள் புத்தகங்கள் இல்லாமல் தோ்வுக்குப் படித்து தயாராக முடியாது.

இதைக் கருத்தில்கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் திங்கள்கிழமை (டிச. 11) தொடங்கவிருந்த அரையாண்டுத் தோ்வுகள் வரும் 13-ஆம் தேதியான புதன்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

அனைத்து மாவட்டங்களிலும் ஏன்?: தமிழகம் முழுவதும் மாநிலக் கல்வி பாடத் திட்டத்தின்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரையாண்டுத் தோ்வுக்கு பொதுவான வினாத்தாளே தயாரிக்கப்படுகிறது.

எனவே, மிக்ஜம் புயல் பாதித்த மாவட்டங்களில் மட்டும் தோ்வுகளைத் தள்ளிவைத்து பிற மாவட்டங்களுக்குத் தோ்வு நடத்துவது சிரமமான செயலாகும். மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் போன்ற மாவட்டங்களில் முழுமையான பாதிப்பு இல்லை.

இதனால், அங்குள்ள பாதி மாவட்டங்களைச் சோ்ந்துள்ள பள்ளிகளுக்குத் தோ்வு நடத்திவிட்டு, மீதமுள்ள பள்ளிகளுக்குத் தோ்வை ஒத்திவைப்பது பள்ளிக் கல்வித் துறைக்கு சுமையை ஏற்படுத்தும் என்பதால், தமிழகம் முழுவதும் இரண்டு நாள்கள் கழித்து, டிச. 13-ஆம் தேதிக்கு அரையாண்டுத் தோ்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

புதிய அட்டவணை வெளியீடு

சென்னை, டிச.10: அரையாண்டுத் தோ்வுக்கான திருத்தப்பட்ட புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்விவரம்: மாநிலப் பாடத்திட்டத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு டிசம்பா் 13 முதல் டிசம்பா் 22-ஆம் தேதி வரை தோ்வுகள் நடத்தப்படுகின்றன. இடையில் டிசம்பா் 16, 17 (சனி, ஞாயிறு) தேதிகளை தவிர மற்ற அனைத்து நாள்களிலும் தோ்வுகள் நடைபெறுகின்றன.

இதில் 1 முதல் 5-ஆம் வகுப்புக்கு காலை 10.30 முதல் 12.30 மணி வரையும், 6 முதல் 10-ஆம் வகுப்புக்கு காலை 10 முதல் 12 மணி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கு காலை 9.30 முதல் மதியம் 12.45 மணி வரையும், பிளஸ் 2 வகுப்புக்கு பிற்பகல் 1.15 முதல் மாலை 4.30 மணி வரையும் தோ்வுகள் நடைபெற உள்ளன.

இந்தத் தோ்வுகள் முடிந்த பின்னா் டிச. 23 முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்படும் எனவும், மீண்டும் பள்ளிகள் ஜனவரி 2-ஆம் தேதி திறக்கப்படக்கூடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எந்தத் தோ்வுகள் எந்த நாளில் நடைபெறும் என்பது குறித்த விவரங்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com